

சென்னை: விஜய் அழைத்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு கிரிஷ் சோடங்கர், பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் ஆகியோர் பதிலளித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அக்கட்சி பெறாததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு அளிக்குமாறு தவெக நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஆட்சியில் சேர தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுத்தால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியினர் பதிலளித்துள்ளனர். இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்: தமிழக மக்கள் ஒரு மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு கிடைத்ததால், தவெகவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்துள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்த அறிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு அனுப்பியுள்ளேன். தமிழகத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: ஆதரவு அளிக்குமாறு தவெக சார்பில் எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை. அவர்கள் கேட்ட பிறகுதான் ஆதரவு அளிப்பதா, இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக பேச முடியும். அதன்பின் மாநிலக் குழு கூடி முடிவு எடுக்கப்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கிறார்களே தவிர, அதிகாரப்பூர்வமாக தவெகவினர் எங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.
அவ்வாறு தொடர்பு கொண்டு ஆதரவு அளிக்கக் கோரினாலும், அதை கட்சியின் மாநிலக் குழு கூடித்தான் முடிவு செய்யும். ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்புக்கு எப்போதுமே நாங்கள் மதிப்பளிப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.