

மதுரை: ‘‘முருகன் அருளால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும்’’ என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மதுரை - திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் கிருத்திகா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:
“தேமுதிகவை கேப்டன் இங்குதான் ஆரம்பித்தார். இத்தொகுதியில் வெற்றிபெற இரண்டு மருமகள்கள் உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளோம். கிருத்திகா பி.இ பட்டதாரி. அவரது ஐடி நிறுவனம் மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளார்.
மல்லிகை பூ நறுமண தொழிற்சாலை அமைக்கப்படும். ஏற்கெனவே தம்பி உதயா இங்கிருந்து எய்ம்ஸ் செங்கலை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது பேசு பொருளானது. ஆனாலும், இன்னும் கட்டுமானம் முடியாமல் இருக்கிறது. நமது வேட்பாளர் வெற்றி பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர முயற்சி எடுப்பார்.
மதுரைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என அண்ணாமலை கூறினார். எந்த மெட்ரோவும் காணவில்லை. தொகுதியின் தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் என யாரும் பேசுவதில்லை.
முருகன் அருளால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும். மக்களின் வாழ்க்கையும் உயரும். கிருத்திகா மக்களின் வாழ்க்கையில் தீப ஒளி ஏற்றுவார். இங்கு ஒற்றுமையாக இருக்கும் மக்கள் சிந்தித்து உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். இம்முறை அண்ணன் ஸ்டாலின் நிறைய திட்டங்களை அறிவித்துள்ளார்.
சேலத்தில் அவருடன் இணைந்து மகளிர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றேன். அதில் பேசும்போது, ஸ்டாலின் வெற்றி பெற்றால் பெண்களுக்கு என்னவெல்லாம் செய்வார் என்ற வாக்குறுதிகளை கொடுத்தேன். ஆனால் பத்திரிகை நண்பர்கள் என்ன சொன்னேன் என்பதை புரியாமல் திரித்து செய்தி வெளியிட்டுள்ளனர். தயவு செய்து புரிந்து கொண்டு செய்தி வெளியிடுங்கள். இன்றைக்கு சில பத்திரிகையில் வந்த செய்திகள் தவறானது.
ஸ்டாலின் 2-வது முறையாக முதல்வராகவும், திமுக 7-வது முறை ஆட்சியும் அமைப்பது உறுதி. பெண்களுக்கான பாதுகாப்பை முக.ஸ்டாலின் உறுதி செய்வார் என பேசினேன். இதையெல்லாம் புரியாமல் தவறாக செய்தி வெளியிடுவோரை வன்மையாக கண்டிக்கிறேன். இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள். நான் என்ன சொன்னேன், சொல்கிறேன் என, மக்களுக்கு தெரியும். ஆயிரம் கை கொண்டு மறைத்தாலும், ஆதவனை யாரும் மறைக்க முடியாது’’ என்றார்.
தீப விவகாரத்தில் அதிமுக, திமுகவினரே அடக்கி வாசித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள பிரேமலதா, தீபம் ஏற்றப்படும் என கூறியிருப்பது, கூட்டணி கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.