

சுசீலா
ஊட்டி: குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்படுவதாக, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட நீலகிரி ஓவியர் கிருஷ்ணனின் மனைவி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வெள்ளரிக்கோம்பை பகுதியில் உள்ள ஆலு குரும்பர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் மறைந்த ஆர்.கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணனின் மனைவி சுசீலா ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: எனது கணவரின் தாத்தா, பாறைகள் மற்றும் சுவர்களில் ஓவியம் தீட்டி வந்தார். சிறுவயதில் இருந்தே அதைப்பார்த்த எனது கணவர், ஓவியத்தை கற்றுக் கொண்டார். வேங்கை மரத்தின் பாலை வைத்து பல்வேறு வண்ணங்களை உருவாக்கினார்.
ஆலம் விழுதுகளை வைத்து ஓவியம் வரைந்தார். டெல்லி, சென்னை, கேரளா உட்பட பல்வேறு இடங்களில் ஓவியக் கண்காட்சி நடத்தி உள்ளார். அப்துல் கலாம், வாஜ்பாய் ஆகியோரிடம் ஓவியங்களை கொடுத்து எனது கணவர் பாராட்டு பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் என் கணவர் உயிரிழந்தார்.
அவருக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் உயிரோடு இருந்தபோது, இந்த விருது கிடைத்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும். மூத்த மகள் வாசுகி, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இரண்டாவது மகன் ராகுல் 9-ம் வகுப்பும், மூன்றாவது மகள் கீதா 7-ம் வகுப்பும், கடைசி மகள் கீர்த்திகா 4-ம் வகுப்பும் படிக்கின்றனர்.
4 குழந்தைகளை வைத்துக் கொண்டு கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனது மூத்த மகளின் கல்லூரி கட்டணத்தைக்கூட என்னால் கட்ட முடியாமல், நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டு அவதிப்படுகிறேன். மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.