

நயினார் நாகேந்திரன்
சென்னை: ‘சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான ‘ஆனைமங்கல செப்பேடுகள்’ நமது தாயகம் திரும்பியதற்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்ததற்கும் முதல்வர் விஜய் வாழ்த்துக் கூறவில்லை. உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா?’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா ஜோசப் விஜய்?
நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன.
விருது வாங்கியவர்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் திளைத்து, பண மெத்தையில் புரண்டவர்கள் இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து தங்களது அசாத்திய திறமையினால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த தமிழர்கள்.
அவர்களின் இந்த வெற்றி கண்டு உங்களுக்கு அகம் மகிழவில்லையா? நமது நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அவர்களைப் போன்ற சாமானியர்களுக்கு கிடைத்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா? முதல்வராக இல்லாவிடிலும் சாதாரண தமிழனாக நீங்கள் கொண்டாடி களிக்க வேண்டிய நிகழ்வல்லவா இது? பின்பு எதற்கு இந்த கனத்த மவுனம்?
நமது சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான ‘ஆனைமங்கல செப்பேடுகள்’ நமது தாயகம் திரும்பியதற்கும் நீங்கள் வாயைத் திறக்கவில்லை.
நமது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைத்ததற்கும் நீங்கள் வாழ்த்துக் கூறவில்லை. உங்களைத் தோள் வலிக்க தாங்கிப் பிடித்து உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன் இதுதானா ஜோசப் விஜய்? இப்படியொரு ஆணவ முதல்வரை தமிழக வரலாறு இதுவரைக் கண்டதில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.