தவெகவில் இணைந்தது ஏன்? - அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கம்

அமைச்சர் ஆனந்த் உடன் வெல்லமண்டி நடராஜன்

அமைச்சர் ஆனந்த் உடன் வெல்லமண்டி நடராஜன்

Updated on
1 min read

சென்னை: அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்ததன் காரணங்களை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விவரித்துள்ளார்.

தவெகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில், “1972 முதல் தொடர்ந்து நான் அதிமுகவில் பணியாற்றி வந்தேன். ஜா அணி, ஜெ அணி என கட்சி பிரிந்தபோது கூட, நான் ஜெ அணியில்தான் இருந்தேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பழனிசாமி நடந்துகொண்ட முறை பிடிக்காமல், பன்னீர்செல்வத்துடன் பயணித்தேன். பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததால், நான் அதிமுகவில் இணைந்தேன்.

அதிமுக தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் அதற்கான பொறுப்பை தானே ஏற்பதாக ஜெயலலிதா வெளிப்படையாக அறிவிப்பார். அதுபோல வெற்றிபெற்றும் காட்டுவார். இப்போது அதிமுகவில் நடக்கும் சிக்கல்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

2 கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக சிதறி சின்னாபின்னமாகிவிட்டது. ‘இந்த தோல்விக்கு நானே பொறுப்பு, அதிமுகவை மீண்டும் வெற்றிபெற வைப்பது என் பொறுப்பு’ என யாரும் சொல்லவில்லை.

அதிமுகவில் நீக்கம், விடுவிப்பு மட்டுமே இப்போது தொடர்ந்து நடக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 80 லட்சமாகி விட்டது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு தலைவர் வேண்டும் என்ற நிலையிலே மக்களாக பார்த்து இந்த தேர்தலில் முதல்வர் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்.

இந்த தேர்தலில் இரு பெரும் கட்சிகள் பண பரிமாற்றங்கள் நடத்தி தேர்தலில் பணியாற்றி தோல்வியடைந்தன. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றவர் முதல்வர் விஜய். அவரை மக்கள் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வரும் காலத்தில் அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரின் புகழைப் பாடும் தலைவராக முதல்வர் விஜய்யை நான் பார்க்கிறேன்.

சாதி, மத, இன பேதம் இல்லாத பெரிய இயக்கம் தவெக, எல்லோரையும் இக்கட்சி அரவணைத்துப் போகிறது. இன்று மிகப் பெரிய மவுனப் புரட்சி நடந்து, முதல்வர் விஜய்யை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தச் சூழலில் தமிழகத்தை நிமிரவைக்கும் தலைவராக அவர் இருப்பார். அதிமுகவில் எப்போதும் பிரச்சினைகள் உருவாகி நிம்மதியற்ற நிலைமை உள்ளது. ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம்சாட்டும் நிலைதான் அதிமுகவில் இப்போது உள்ளது” என்றார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ஆனந்த் உடன் வெல்லமண்டி நடராஜன்</p></div>
அரசியலில் அடுத்தகட்ட நகர்வு என்ன? - ஆதரவாளர்களிடம் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in