அரசியலில் அடுத்தகட்ட நகர்வு என்ன? - ஆதரவாளர்களிடம் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்
Updated on
1 min read

சென்னை: “இன்றைய அரசியல் களம் என்ன, அடுத்தது என்ன என்பது குறித்து எனக்கு மகத்தான வெற்றியை கொடுத்த என் தொகுதி மக்களின் உணர்வுகள், கருத்துக்களை கேட்டறிந்தேன். அவர்களின் கருத்துக்கு ஏற்ப அடுத்தகட்ட நகர்வினை பற்றி முடிவெடுப்பேன்” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் மட்டுமே வென்று மூன்​றாம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது. அதைத்​தொடர்ந்து பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் கருத்​து​வேறுபாடு ஏற்​பட்டு சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் தனி அணி​யாகச் செயல்​பட்​டனர்.

அதைத்​தொடர்ந்​து, இரு அணி​யினரும் சட்​டப்​பேரவை அதி​முக தலை​வர், கொற​டாவைத் தேர்ந்​தெடுத்து, பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகரிடம் கடிதம் அளித்​திருந்​தனர். இதற்​கிடையே, சி.​வி.சண்​முகம் அணி​யில் இருந்த மரகதம் குமர​வேல், சத்​ய​பா​மா, ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகிய 4 எம்​எல்​ஏக்​கள், தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.

இந்​நிலை​யில், சி.​வி.சண்​முகம் அணி எம்​எல்​ஏக்​களான எஸ்.பி.வேலுமணி, சி.​விஜய​பாஸ்​கர், கே.பி.அன்​பழகன் உள்ளிட்டோர் பழனி​சாமியை சென்னை பசுமைவழிச் சாலை​யில் நேற்று சந்​தித்து சமா​தானப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் உடன்​பாடு எட்​டப்​பட்ட நிலை​யில், இரு அணி​யினரும் தலை​மைச் செயல​கம் புறப்​பட்​டுச் சென்​றனர். அங்கு இரு அணி​கள் சார்பிலும், தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேர​வைத் தலைவரிடம் ஏற்கெனவே அளித்த கடிதத்தை திரும்​பப் பெறு​வ​தாக கடிதம் அளித்தனர்.

மேலும், அதி​முக​வின் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக பழனிசாமி, கொற​டா​வாக அக்ரி கிருஷ்ண​மூர்த்தி ஆகியோரை தேர்ந்​தெடுத்​திருப்​ப​தாக​வும் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் அளித்​தனர். இந்த நிகழ்வில், சி.​வி.சண்​முகம் உடன் வரவில்​லை. அவர் அதிருப்​தி​யில் இருப்​ப​தாகத் தெரி​கிறது. அதேபோல சி.விஜயபாஸ்கர், சபாநாயகரை சந்திக்க வந்தபோதும், பழனிசாமியை நேரில் சந்திக்கவில்லை. இதனால் அவரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை விராலிமலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் விஜயபாஸ்கர் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுகவில் தொடரலாமா, தவெகவில் இணையலாமா, அரசியலில் இருந்தே விலகலாமா என்ற 3 விஷயங்களை முன்வைத்து அவர் தன் ஆதரவாளர்களிடம் கருத்துக்களை கேட்டதாகத் தகவல்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தச் சூழலில் இன்றைய அரசியல் களம் என்ன, அடுத்தது என்ன என்பது குறித்து எனக்கு மகத்தான வெற்றியை கொடுத்த என் தொகுதி மக்களின் உணர்வுகள், கருத்துக்களை கேட்டறிந்தேன். அதுபோல என் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டு வருகிறேன்.

அவர்களின் கருத்துக்கள், எண்ணங்களை, உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் கருத்துக்கு ஏற்ப முடிவெடுப்பேன். என்னை வெற்றிபெற வைத்த தெய்வங்களின் கருத்தை கேட்டுவிட்டு அடுத்தகட்ட நகர்வினை பற்றிக் கூறுவேன்” என்றார்.

சி.விஜயபாஸ்கர்
“மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக ஏமாற்றத்தையே தந்துள்ளது” - அன்சாரி விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in