வேப்பனப்பள்ளி தொகுதியில் வெற்றிக் கிரீடம் யாருக்கு?

வேப்பனப்பள்ளி தொகுதியில் வெற்றிக் கிரீடம் யாருக்கு?
Updated on
2 min read

தமிழக சட்​டப்​பேரவை தொகு​தி​களின் வரிசையில் 54-வது இடத்தில் வேப்பனப்பள்ளி தொகுதி உள்ளது. 2011 தொகுதி மறுசீரமைப்பின் போது, புதிதாக உருவாக்கப்பட்டது வேப்பனப்பள்ளி தொகுதி. இங்கு இதுவரை நடைபெற்ற 3 தேர்தல்களில் திமுக 2 முறையும், அதிமுக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியை பொறுத்தவரை ஆந்திர, கர்நாடக மாநில எல்லையை ஒட்டியும், வனங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. நகராட்சி, பேரூராட்சி என நகர உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம், கிருஷ்ணகிரி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 73 ஊராட்சிகள் இத்தொகுதியில் உள்ளடக்கியுள்ளன.

இத்தொகுதியின் மையப்பகுதியில் இந்தியாவி லேயே மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண். 7 (கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை) செல்கிறது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது என நான்கு மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். கவுடா, வன்னியர்கள், ரெட்டி, பட்டியலின மக்கள் மற்றும் பிற சமூக மக்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பரவலாக உள்ளனர்.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்...

வேப்பனப்பள்ளியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும். 3 மாநில எல்லையை இணைக்கும் பகுதியாக வேப்பனப்பள்ளி நகரம் உள்ளதால், கர்நாடகா, தமிழகம் வழியாக ஆந்திராவிற்கு பேருந்து வசதி, கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனப்பள்ளி வழியாக கோலாருக்கு கரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்.

சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி சுற்றுவட்டாரங்களில் உள்ள 12 ஏரிகளுக்கு கெலவரப்பள்ளி அணை உபரிநீரை கொண்டு செல்ல வேண்டும். தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சாலை, பேருந்து வசதி, பாதுகாப்பான குடிநீர், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும், ஊடேதுர்க்கம், சானமாவு, சூளகிரி, மகாராஜகடை ஆகிய பகுதிகளையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் முகாமிட்டு, மனித உயிர், பயிர்ச் சேதங்கள் ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை தேவை.

சானமாவு வனத்தில் யானைகள் சரணாலயம், மேலுமலையில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடந்த செல்ல இயற்கை மேம்பாலம், காய்கறிகள், கீரைகள், கொத்தமல்லி உள்ளிட்ட ஆண்டு முழுவதும் விளைவிக்கப்படுவதால், அவற்றை இருப்பு வைக்க குளிர்பதன கிடங்கு வசதி, மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சியும், நிலம் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும். சூளகிரி கொத்தமல்லி, கீரை வகைகள் ஏற்றுமதி செய்யும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய சந்தை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி வேளாண் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

வேட்பாளர்களின் பின்புலம்

தற்போதைய தேர்தலில் அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏவும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பி.எஸ்.சீனிவாசன் போட்டியிடுகிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சம்பங்கி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தற்போது அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் நாகராஜ் போட்டியிடுகிறார்.

அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி, கட்சியில் 2-ம் கட்ட தலைவராகவும், மூத்த அரசியல் தலைவராகவும் உள்ளதால், மக்களிடம் நன்கு பரிச்சயமானவராக இருப்பது இவருக்கு பலம். மேலும் அவரது அரசியல் அனுபவம் தேர்தல் பிரச்சாரத்திற்கு கைகொடுத்து வருகிறது. தினசரி காலை 6 மணி முதல் கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

ஒவ்வொரு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களிலும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளிப்பதோடு, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளான அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.10,000, மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.2,000, ஆண்டிற்கு 3 சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பேசி வாக்கு சேகரிக்கிறார்.

திமுக வேட்பாளர் பி.எஸ் சீனிவாசன், இளைஞர்களிடையே நன்கு அறிமுகமானவர் என்பது இவருக்கு பலமாக உள்ளது. தேர்தல் களத்தில் கடந்த 5 ஆண்டுகள் திமுக அரசு செய்த பல்வேறு திட்டங்கள் மற்றும் நல உதவிகளை பட்டியலிட்டு வாக்குகளை சேகரித்து வருகிறார். மேலும், திமுக தேர்தல் வாக்குறுதிகளை விரிவாக 3 மொழிகளில் எடுத்துரைக்கிறார். இப்போட்டிகளுக்கு இடையில் களத்தில் நாதக வேட்பாளர் நாகராஜ், மாற்றத்திற்காக வாக்களிக்கக் கோரி மக்களைச் சந்தித்து வருகிறார்.

தவெக வேட்பாளர் சம்பங்கி, கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும், தனது சமூக வாக்குகள் தனக்கு கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையில் களத்தில் வலம் வருகிறார். இத்தொகுதியில் அதிமுக - திமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் இத்தொகுதியை அதிமுக தக்க வைக்குமா என்பதை அறிய தேர்தல் முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,24,431

  • பெண் - 1,21,624

  • மூன்​றாம் பாலினத்​தவர் - 38

  • மொத்த வாக்​காளர்கள் - 2,46,093

வேப்பனப்பள்ளி தொகுதியில் வெற்றிக் கிரீடம் யாருக்கு?
தமிழகத்தில் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in