

சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப்பட்டியலில் 91-வது இடத்தில் உள்ளது வீரபாண்டி. சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரை ஒட்டி அமைந்துள்ளது இத்தொகுதி. சேலம் வட்டத்தில் உள்ள கீரபாப்பம்பாடி, மஜிராகொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மல்லராவுத்தம்பட்டி, பெரியசீரகாபாடி, சின்னசீரகாபாடி, வீரபாண்டி, அரியாம்பாளையம், உத்தம சோழபுரம், அக்ரஹாரபூலாவரி உள்ளிட்ட பல கிராமங்கள், பனமரத்துப்பட்டி (பேரூராட்சி), மல்லூர் (பேரூராட்சி), இளம்பிள்ளை (பேரூராட்சி), ஆட்டையாம்பட்டி (பேரூராட்சி), மாரமங்கலத்துப்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் வீரபாண்டி தொகுதியில் உள்ளன.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
வீரபாண்டி தொகுதியில் மக்களின் முக்கிய தொழிலாக விவசாயமும், நெசவும் உள்ளன. இப்பகுதி நீராதாரமாக திருமணிமுத்தாறு இருக்கும் நிலையில், சேலம் மாநகர கழிவு நீரையும், சாயப்பட்டறைகளின் ரசாயனக் கழிவு நீரையுமே, திருமணிமுத்தாறு சுமந்து வருவதாக, தொகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், ஏரிகளும் மாசடைந்து, நிலத்தடி நீரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன.
திருமணிமுத்தாறு ராஜவாய்க்காலும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். வீரபாண்டி தொகுதியில் பனமரத்துப்பட்டி, வீரபாண்டி உள்பட பல கிராமங்களில் மலர் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அதிக விளைச்சல் காலங்களில் மலர்களுக்கு போதிய விலை கிடைக்காமல், கடும் இழப்பு ஏற்படுவதால், விவசாயிகள் அடிக்கடி பாதிப்படைந்து வருகின்றனர்.
எனவே, மலர்களுக்கு உரிய விலை கிடைக்கவும், விலை சரிவு காலங்களில், அவற்றை மதிப்புகூட்டி விற்பனை செய்ய, வாசனை திரவிய தொழிற்சாலையை தொகுதியில் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
தொகுதியில் பரவலாக, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவுத் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இத்தொழிலை மேம்படுத்த, நெசவாளர்களுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி கிடைப்பதில்லை. அதற்கான முன்னெடுப்பு எதுவும் செய்யப்படவில்லை.
மேலும், ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த சிறப்பு பொருளாதார திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்பது தொகுதி மக்களின் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. அரசு சார்பில் ஜவுளித் தொழிலுக்கான அனைத்து உதவிகளும் கிடைக்கக்கூடிய, ஒரு சேவை மையத்தை அமைத்து, நெசவாளர்களை தொழில்நுட்ப ரீதியாகவும், மாறிவரும் சந்தைக்கு ஏற்ப, நவீன ரக ஜவுளிகளையும் உற்பத்தி செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இத்தொகுதியில், தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பனமரத்துப்பட்டி ஏரி உள்ளது. ஒரு காலத்தில் சேலம் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், தமிழக சினிமா உலகின் படப்பிடிப்புத் இடங்களில் ஒன்றாகவும் புகழ்பெற்று இருந்தது இந்த ஏரி.
பனமரத்துப்பட்டி ஏரிக்கு மேட்டூர் அணை உபரிநீரை கொண்டு வந்தால், சுற்று வட்டாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதுடன், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விளை நிலங்கள் பாசனவசதி பெறும். ஆனால், பனமரத்துப்பட்டி ஏரி சீரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் உள்ளது.
ஏரிக்கு மேட்டூர் அணை உபரிநீரை கொண்டு வரும் திட்டமும் கானல் நீராகவே இருக்கிறது என்பது தொகுதி மக்களின் மனக்குமுறலாக இருந்து வருகிறது. ஏரியை சீரமைத்து, மேட்டூர் உபரிநீரை கொண்டு வந்து நிரப்பினால், இத்தொகுதி மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக வளர்ச்சியடையும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
கடந்தகால தேர்தல் முடிவுகள்
வீரபாண்டி தொகுதி உருவாக்கப்பட்டு 1957-ல் நடைபெற்ற முதல் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இந்த தொகுதி திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு, ஆளுக்கொரு தசாப்தமாக வெற்றியை கொடுத்து வந்தது.
திமுகவில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இத்தொகுதியில் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது உறவினரான விஜயலட்சுமி பழனிசாமியும் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று, அமைச்சராகவும் இருந்தவர்.
வீரபாண்டி தொகுதியில் திமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது, அதில் 2011 முதல் தொடர்ச்சியாக 3 முறையை வெற்றியை தக்க வைத்து இருக்கிறது.
களம் காணும் வேட்பாளர்கள்
தற்போது அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ., மனோன்மணியின் மகன் பாலாஜி சுகுமார், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்ப உறவினர் தருண், தவெக சார்பில் பழனிவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், அவரது நேரடி கண்காணிப்பில் தேர்தல் பணியை மேற்கொண்டிருப்பதால், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் அதிமுகவினர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தொகுதியில் இம்முறை வெற்றி உறுதி என திமுகவினரும் போட்டியை தீவிரப்படுத்தி வருகின்றனர். தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், இம்முறை வீரபாண்டி தொகுதி அதிமுக, திமுகவுக்கு கிடைக்காது. எங்களுக்குத் தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என நம்பிக்கையுடன் களத்தில் இருக்கின்றனர். இதில் யார் வெற்றி பெறுவார் என்பது மே 4-ல் உறுதி செய்யப்படும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 1,24,850
பெண்கள் - 1,23,611
மூன்றாம் பாலினத்தவர் - 17
மொத்த வாக்காளர்கள் - 2,48,478