

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் வந்தவாசி சட்டப்பேரவை (தனி) தொகுதியாக உள்ளது. இது தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 69-வது இடத்தில் உள்ளது. இந்த தொகுதி வந்தவாசி நகராட்சி, தேசூர் மற்றும் பெரண மல்லூர் ஆகிய 2 பேரூராட்சிகளும், 117 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளன. இங்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.
அதேபோல், இங்கு தயாரிக்கப்படும் கோரைப்பாய்கள் சிறப்பு மிக்கது. இந்த தொகுதியில் தென்னாங்கூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வென்குன்றம் தவளகிரீஸ்வரர் கோயில் மற்றும் வந்தவாசி கோட்டை, தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் சுற்றுலா தலமாக உள்ளன. வந்தவாசி தொகுதியை பொறுத்தவரைவில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பெருமளவில் உள்ளனர். முதலியார்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதர தரப்பினர் உள்ளனர்.
வந்தவாசி தொகுதியில் இதுவரை 16 சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 8 முறை திமுகவும், 4 முறை அதிமுக, 2 முறை காங்கிரஸ் மற்றும் பாமக, பொது நல கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர் தலில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திமுக வேட்பாளர் அம்பேத்குமார் மீண்டும் 3-வது முறையாக திமுக வேட்பாளராக போட்டி யிடுகிறார்.
அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுகிறார். தவெக வேட்பாளராக உதயகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கணேஷ் மற்றும் சுயேட்சை என மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக வேட்பாளர் கடந்த திமுக ஆட்சி காலங்களில் தொகுதியில் மேற் கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி களையும் தெரிவித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் தேர்தல் வாக்குறுதிகளையும், திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை தெரிவித்தும் வாக்கு சேகரித்து வருகிறார். வழக்கம் போல், தவெக, நாம் தமிழர் கட்சியினர் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட நாள் கோரிக்கைகள்
* அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி நவீன மருத்துவ வசதிகள், போதிய மருத்துவர் களை நியமிக்க வேண்டும்.
* புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
* வந்தவாசி நகரில் இருந்து இரவும், பகலும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து சேவை ஏற்படுத்த வேண்டும்.
* வந்தவாசி நகரை இணைக்கும் வகையில் வெளிப்புற சுற்றுவட்ட புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
* இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்க தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.
இதுவரை வெற்றிபெற்றவர்கள்
1951 சோமசுந்தரம் - பொது நல கட்சி
1957 ராமசந்திர ரெட்டியார் - காங்கிரஸ்
1962 முத்துலிங்கம் - திமுக
1967 முத்துலிங்கம் - திமுக
1971 ராசகோபால் - திமுக
1977 முனுசாமி - அதிமுக
1980 குப்புசாமி - அதிமுக
1984 ஆறுமுகம் - காங்கிரஸ்
1989 தனராசு - திமுக
1991 தமிழரசன் - அதிமுக
1996 பாலா ஆனந்தன் - திமுக
2001 முருகவேல்ராஜன் - பாமக
2006 ஜெயராமன் - திமுக
2011 குணசீலன் - அதிமுக
2016 அம்பேத்குமார் - திமுக
2021 அம்பேத்குமார் - திமுக
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,05,370
பெண் - 1,08,099
மூன்றாம் பாலினத்தவர் - 5
மொத்த வாக்காளர்கள் - 2,13,474