கீழ்வேளூர் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டுவது யார்?

கீழ்வேளூர் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டுவது யார்?
Updated on
2 min read

கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில்தான் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேரலாயம் அமைந்துள்ளது. இங்கு இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோயில், எட்டுக்குடி முருகன் கோயில் என தமிழகத்தின் முக்கியமான ஆன்மிக சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை இந்த தொகுதியில்தான் உள்ளது.

அதேபோல கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக 44 விவசாய தொழிலாளர்களை குடிசையில் உயிரோடு எரித்த வெண்மணி நினைவு ஸ்தூபியும் இந்த தொகுதியில்தான் உள்ளது. இந்த தொகுதி முழுவதும் வேளாண்மை மற்றும் மீன்வளம் ஆகியவை முக்கிய வாழ்வாதாரமாக உள்ளன.

நெல் சாகுபடி பிரதானமாக உள்ளதால் விவசாய தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பகுதி. தொகுதியில் வேறு எந்த மாற்று தொழில் மற்றும் தொழிற்சாலைகள் இல்லாததால் பல குடும்பங்கள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.

தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கக் கூடிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தொகுதியை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிடுகின்றன.

கடந்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட நாகை மாலி வெற்றி பெற்று தொகுதியின் முதல் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உ.மதிவாணன் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மீண்டும் நாகை மாலி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த முறையும் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு மாதர் சங்க மாநில துணைத் தலைவர் லதா வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக அன்புமணி அணிக்கு ஒதுக்கப்பட்டு அதன் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திகா களமிறக்கப்பட்டு தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தவெக சார்பில் செந்தில் பாண்டியன் வேட்பாளராகியுள்ளார். நான்கு முனை போட்டி நிலவும் இந்தத் தொகுதியை தக்க வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கைப்பற்ற பாமக, நாதக, தவெக கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள்

* காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களால் தினமும் 50 முறைக்கு மேல் ரயில்வே கேட் பூட்டப்படுவதால் தொடர்ச்சியாக பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கீழ்வேளூர்- கச்சணம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

* இறால் பண்ணைகள் அதிகம் உள்ள நிலையில் அவற்றை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும்.

* மழைநீர், காவிரி நீர் வீணாக கடலில் கலக்காமல் தண்ணீரை சேமிப்பதற்கு நீர் மேலாண்மை திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

* பயிர்க் காப்பீட்டு திட்டத்தை அரசே நடத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு.

* கீழ்வேளூரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

* குருக்கத்தியில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இயங்கி வரும் அரசு வேளாண்மை கல்லூரிக்கு சொந்தக் கட்டிடம் கட்ட வேண்டும்.

இதுவரை வென்றவர்கள்

2011 - நாகை மாலி - மார்க்சிஸ்ட் கம்யூ.

2016 - மதிவாணன் - திமுக

2021 - நாகை மாலி - மார்க்சிஸ்ட் கம்யூ.

வாக்காளர்கள் விவரம்

ஆண்கள் - 81,095

பெண்கள் - 82,499

மூன்றாம் பாலினத்தவர் - 4

மொத்தம் - 1,63,598

கீழ்வேளூர் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டுவது யார்?
Chiraiya: மனைவியின் பெட் ரூம் ‘NO’ உரிமை பேசும் கமலேஷ் | திரை தேவதைகள் 12

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in