ஓசூர் தொகுதியில் வெற்றி முகம் யாருக்கு?

ஓசூர் தொகுதியில் வெற்றி முகம் யாருக்கு?
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவை தொகுதி வரிசையில் 55-வது இடத்தில் உள்ளது ஓசூர் தொகுதி. இத்தொகுதியை ஒட்டி கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்கள் அமைந்துள்ளன. இரு மாநில எல்லையில் அமைந்துள்ளதால் கடந்த கால தேர்தல்களில் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது.

இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது என பல மொழிகள் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தமிழகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் தொழில் மையமாக இருந்து வருகிறது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகளும் உள்ளன.

இங்கு கைக்கடிகாரம், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன தயாரிப்பு, ஆப்பிள் ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது.

இங்கு நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் மண் வளம் வேளாண் தொழிலுக்கும் கைகொடுத்து வருகிறது. இங்கு ரோஜா உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்து, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஓசூர் நகரின் மையத்தில் உள்ள மலை மீது சந்திரசூடேஸ்வரர் கோயில், ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோயில், பாகலூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில்கள் மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த ஊரான தொரப்பள்ளி ஆகியவை இத்தொகுதியில் அடங்கியுள்ளது. இத்தொகுதியில் வன்னியர் 12 சதவீதம், பட்டியலினத்தவர் 13 சதவீதம், நாயுடு 11 சதவீதம், கவுடா 10 சதவீதம், இதர வகுப்பினர் 54 சதவீதம் பேர் உள்ளனர்.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளதால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் உள்ளது.

மாநகரமாக தரம் உயர்த்தப்பட்டாலும் குற்றங்களைத் தடுக்க போதிய காவலர்கள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. அதேபோல வட மாநிலங்களுக்கு அதிக வாகனங்கள் சென்று வரும் நிலையில் நகரில் போக்குவரத்து நெரிசல் மக்களுக்கு பெரும் துயராக இருந்து வருகிறது.

ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச மலர் ஏல மையம் தொடங்கப்பட்டது. ஆனால், மலர் விலை நிர்ணயம் உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாததால் விவசாயிகளுக்கு பயன் இல்லாமல் உள்ளது.

காய்கறிகள் மற்றும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காலங்களில் இருப்பு வைக்க குளிர்சாதன வசதி வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. பெங்களூரு-ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம், அரசு பொறியியல் கல்லூரி, தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவு கலப்பை தடுக்க வேண்டும். ஓசூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இஎஸ்ஐ மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

வேட்பாளர்களின் பின்புலம்

இத்தொகுதியில் 1951, 1957 தேர்தல்களில் சுயேச்சைகளும், 1967-1971 இருமுறை சுதந்திரா கட்சியும், 1962, 1977- 2011 வரை காங்கிரஸ் 9 முறையும், 1996 ஜனதா தளமும் வெற்றி பெற்றன. 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணரெட்டி வெற்றி பெற்று அமைச்சரானார்.

3 ஆண்டுகள் அமைச்சராக இருந்த அவர் மீதான குற்ற வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டில் அவர் விடுவிக்கப்பட்டார். 2019 இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. 2021 தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஓய்.பிரகாஷ் வெற்றி பெற்றார்.

தற்போதைய தேர்தலில் திமுக சார்பில் மேயர் சத்யா, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேந்தரக்கரசன் (எ) வடிவேலு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் சத்யா, மேயராக இருந்து நகரின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியுள்ளதோடு, மக்களிடம் எளிமையாகப் பழகுவதால் தொகுதி மக்களிடம் நன்கு பரிச்சயம் என்பது அவருக்கு பலமாகவும், திமுக அரசின் திட்டங்கள், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பலம், இடைத்தேர்தலில் வெற்றி அனுபவத்துடன் களத்தில் தேர்தல் பணியாற்றி வருகிறார்.

அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணரெட்டி, மக்களிடம் நன்கு பரிச்சயமானவர் என்பதுடன் அவரது சமூக வாக்குகள், கூட்டணிக் கட்சிகளின் பலம் ஆகியவற்றை நம்பி களப்பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய்க்கு சினிமா ரசிகர்கள் அதிகளவில் இருந்தாலும், ஆந்திர, கர்நாடக மாநில எல்லையில் இத்தொகுதி உள்ளதால், இங்கு பெரும்பாலும் ஆந்திர, கன்னட நடிகர்களின் ரசிகர்கள் அதிகம்.

தேர்தல் களத்தில் மக்களிடம் நன்கு பரிச்சயமான திமுக-அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில், வெற்றிக்கனியைப் பறிப்பது இருவருக்கும் எளிதானதாக இருக்காது என்ற நிலையே உள்ளது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,69,099

பெண் - 1,69,124

மூன்​றாம் பாலினத்​தவர் - 72

மொத்த வாக்​காளர்கள் - 3,38,295

ஓசூர் தொகுதியில் வெற்றி முகம் யாருக்கு?
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in