வேதாரண்யம் தொகுதியில் வெற்றிக் கொடி கட்டுவது யார்?

வேதாரண்யம் தொகுதியில் வெற்றிக் கொடி கட்டுவது யார்?
Updated on
2 min read

நாகை மாவட்டத்தின் வங்கக் கடலோரம் பரந்து விரிந்துள்ளது வேதாரண்யம் தொகுதி. பணப்பயிர் சாகுபடி, புகையிலை சாகுபடி, மலர் சாகுபடி ஆகியவற்றுக்கு சாதகமான பூமியாதலால் அதுவே பிரதான விவசாயமாக இருக்கிறது.

மா, முந்திரி, சவுக்கு, தென்னை ஆகிய விவசாயமும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நெல் சாகுபடியும் பரவலாக நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தின் முக்கிய மீன்பிடித் தலங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் தூத்துக்குடிக்கு அடுத்து உப்பு உற்பத்தியில் 2-வது இடம் பெற்றுள்ளது.

சுதந்திர போராட்டத்தில் ராஜாஜி தலைமையில் இங்குள்ள அகஸ்தியம் பள்ளியில் உப்பு எடுக்கும் போராட்டம் நடைபெற்றது வரலாறு. கோடியக்கரையில் உள்ள வன உயிரின சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல இங்குள்ள சதுப்பு நிலப்பகுதிக்கு உலகெங்கும் இருந்தும் பறவைகள் வலசை வருகின்றன.

வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நான்கு வேதங்களும் வழிபட்டதாகவும், மூடி இருந்த கோயில் கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகம் பாடி திறந்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

வேதாரண்யம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 50 ஊராட்சிகள், திருக்குவளை வட்டத்தைச் சேர்ந்த 9 கிராமங்கள், வேதாரண்யம் நகராட்சி, தலைஞாயிறு பேரூராட்சி ஆகியவை இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

இங்கு அகமுடையார், வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பட்டியல் இனத்தவர், முத்தரையர், வெள்ளாளர், முஸ்லிம்கள், யாதவர் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரும் உள்ளனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் பெற்ற வாக்குகள் 78,719. அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் 66,390 வாக்குகள் பெற்று 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

வேட்பாளர்கள் பின்புலம்

இந்த முறை திமுகவே நேரடியாக களம் காண்கிறது. முன்னாள் எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரத்தின் மகனும், தற்போதைய நகர்மன்றத் தலைவருமான மா.மீ.புகழேந்தி வேட்பாளராகியிருக்கிறார். அதிமுக தரப்பில் எம்எல்ஏவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீண்டும் போட்டியிடுகிறார்.

நாதக சார்பில் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக் களத்தில் இருக்கிறார். தவெக சார்பில் வேளாங்கண்ணி கிங்ஸ்லி ஜெரால்டு போட்டியிடுகிறார். இப்படி நான்கு முறை போட்டி இருந்தாலும் இங்கு திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது.

இதுவரை வென்றவர்கள்

1962- என்.எல்.ராமலிங்கம் - காங்கிரஸ்

1967 - பி.வெங்கடாசலத் தேவர் - காங்கிரஸ்

1971 - எம்.மீனாட்சிசுந்தரம் - திமுக

1977 - எம்.மீனாட்சிசுந்தரம் - திமுக

1980 - எம்.எஸ்.மாணிக்கம் - அதிமுக

1984 - எம்.மீனாட்சிசுந்தரம் - திமுக

1989 - பி.வி.ராஜேந்திரன் - காங்கிரஸ்

1991 - பி.வி.ராஜேந்திரன் - காங்கிரஸ்

1996 - எஸ்.கே.வேதரத்தினம் - திமுக

2001 - எஸ்.கே.வேதரத்தினம் - திமுக

2006 - எஸ்.கே.வேதரத்தினம் - திமுக

2011 - என்.வி.காமராஜ் - அதிமுக

2016 - ஓ.எஸ்.மணியன் - அதிமுக

2021 - ஓ.எஸ்.மணியன் - அதிமுக

தொகுதியில் உள்ள பிரச்சினைகள்

* தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிகளவில் மழை பெற்றாலும் அவற்றை சேமிக்க திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

* ஆறு, வாய்க்கால்களை முழுமையாக தூர் வார வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

* வேதாரண்யத்தில் உள்ள தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

* உப்பள தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்டகாலமாக உள்ளது.

* வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன் பிடிக்கும் கோடியக்கரை படகு துறையை மேம்படுத்த வேண்டும், அரசின் மின் இறைவைப் பாசன திட்டத்தை மேம்படுத்த வேண்டும்,

* இங்கு உற்பத்தியாகும் மா, முந்திரி, சவுக்கு, முல்லைப் பூ ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும் இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக உள்ளன.

வாக்காளர்கள் எண்ணிக்கை

ஆண்கள் - 91,735

பெண்கள் - 94,299

மொத்தம் - 1,86,034

வேதாரண்யம் தொகுதியில் வெற்றிக் கொடி கட்டுவது யார்?
அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்தம் - ஈரான் நிராகரிப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in