மேட்டுப்பாளையம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்?

மேட்டுப்பாளையம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்?
Updated on
2 min read

கோவை: நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோயில், வன பத்ரகாளியம்மன் கோயில் ஆகிய பெருமைகளை கொண்டது.

நூற்றாண்டு பழமைவாய்ந்த ஊட்டி மலை ரயில் இங்கிருந்துதான் இயக்கப்படுகிறது. அடர்ந்த காடுகளும், பவானி நதியும் மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு எல்லையாக அமைந்துள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய குடிநீர் திட்டங்கள், இந்த தொகுதியில் உள்ள பவானி ஆற்றை மையப்படுத்தித் தான் மேற்கொள்ளப்படுகின்றன.

பெரிய தொழிற்சாலைகள் எதுவும் அதிகளவில் கிடையாது. விவசாயமும், நெசவும் தான் இந்தத் தொகுதி மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது. வாழை மற்றும் கருவேப்பிலை சாகுபடி இங்கு முக்கியமானதாக உள்ளது. அதற்கு அடுத்து பாக்கு, தென்னை, மஞ்சள், கரும்பு விவசாயம் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

சிறுமுகை மற்றும் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். இங்கு மனித உழைப்பால் உருவாக்கப்படும், கலை நயம் மிக்க பட்டுச் சேலைகள் சர்வதேச அளவில் பிரபலமானவை ஆகும்.

ஒக்கலிக கவுடர் சமுதாய மக்கள் இந்தத் தொகுதியில் 65 சதவீதத்துக்கும் அதிகமாக வசிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக இதர இனத்தினர், சிறுபான்மை இனத்தினர் வசிக்கின்றனர்.

மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர் ஆகிய நகராட்சிகள், 17-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.

இதுவரை வென்ற கட்சிகள்

மேட்டுப்பாளையம் தொகுதியில் இதுவரை நடைபெற்ற 16 தேர்தல்களில், அதிமுக 9 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக 2 முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலில், மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் கவிதா கல்யாணசுந்தரம், அதிமுக சார்பில் 3 முறை எம்.எல்.ஏ

வாக இருந்த ஓ.கே.சின்னராஜ், தவெக சார்பில் சுனில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொகுதியில் நிலவும் பிரச்சினை

மேட்டுப்பாளையம் தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கூறும்போது, “கடந்த 5 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் ரூ.100 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணியை விரைவாக முடித்து கழிவுநீரை முறையாக சுத்திகரிக்க வேண்டும். நகரில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். காந்தையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

இத்தொகுதியி்ல் உள்ள பில்லூர் அணையி்ன் மொத்த நீர்த்தேக்க உயரம் 100 அடி ஆகும். ஆனால், 50 அடிக்கு சகதிகள் தேங்கிக் காணப்படுவதால், 50 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்க முடிகிறது. இந்த அணையை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

இங்குள்ள பவானி ஆற்றை மையப்படுத்திதான், பல ஆயிரம் கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி கூட்டுக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் தொடக்கப் பகுதியில் உள்ள காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கண்ட பகுதிகள் இணைக்கப்படும் என அரசு அறிவித்து பல ஆண்டுகளாகிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. இத்தொகுதிக்கு உட்பட்ட காகித அட்டை தயாரிப்பு மற்றும் துணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலந்து நீர்நிலையை மாசுபடுத்தி வருகின்றன.

இதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்களை முறைப்படுத்த வேண்டும். தட்டுப்பாடற்ற, சீரான குடிநீர் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். மிக முக்கிய பிரச்சினையாக மனித-வன விலங்குகள் மோதல் உள்ளது.

அதிகளவில் வனப் பகுதியை உள்ளடக்கிய இந்தப் பகுதியில் மனித – வன விலங்குகள் மோதல் அடிக்கடி நடக்கின்றன. இதனால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். விளை நிலங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களையும் 40 சதவீதம் அளவுக்கு வனவிலங்குகள் சேதப்படுத்தி விடுகின்றன.

இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன எல்லைகளில் அகழிகளை ஏற்படுத்தி முறையாக பராமரிக்க வேண்டும். சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும். நெசவுத் தொழிலை மட்டும் நம்பி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இத்தொகுதியில் உள்ளனர். இங்குள்ள கைத்தறி நெசவாளர்களின் தொழிலை மேம்படுத்த மூலப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,33,379

பெண் - 1,46,805

3-ம் பாலினத்​தவர் - 34

மொத்த வாக்​காளர்கள் - 2,80,218

மேட்டுப்பாளையம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்?
மயிலாப்பூர் தொகுதியில் வெற்றிக்கனி யார் கையில்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in