

த.வேலு - திமுக | தமிழிசை சவுந்தர ராஜன் - பாஜக | அருண் - நாதக | வெங்கடரமணன் - தவெக |
மயிலாப்பூர் தொகுதியில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தமிழக சட்டப் பேரவை தொகுதிகளின் பட்டியலில் 25-வது இடம் பெற்றுள்ளது மயிலாப்பூர் தொகுதி. இது சென்னை மாவட்டத்தின் கலாச்சார மற்றும் ரியல் எஸ்டேட் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய தொகுதி. தென் சென்னை மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. சிவ தலங்களில் முக்கிய கோயிலான கபாலீஸ்வரர் கோயில் இந்த தொகுதியில்தான் உள்ளது. அது மட்டும் அல்லாமல் பிரசித்தி பெற்ற சாந்தோம் தேவாலயமும் இந்த தொகுதியில்தான் வருகிறது.
உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நிறைந்துள்ளன. இதனால் ரியல் எஸ்டேட் சந்தையில் அதிக தேவையுள்ள இடமாகவும் உள்ளது. இந்தத் தொகுதி சென்னை மாநகரின் பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் மையப் புள்ளியாகச் செயல்படுகிறது. மேலும், ஏராளமான சாதாரண வீடுகளும் உள்ளன. மீனவ மக்களும், பிராமண சமூகத்தினரும் அதிகம் வசிக்கும் தொகுதியாக உள்ளது. பிற சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்:
தண்ணீர் பற்றாக்குறை, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுதல் மற்றும் மந்தைவெளி, அபிராமபுரம் போன்ற பகுதிகளில் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகள் நிலவுகின்றன. மேலும், மெட்ரோ ரயில் பணிகளால் போக்குவரத்து நெரிசலும் முக்கிய சவால்களாக உள்ளன. அதோடு பழமையான குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு மேம் பாடு மற்றும் வெள்ள நீர் வடிகால் வசதி போன்ற நீண்ட காலப் பிரச்சினைகளும் உள்ளன.
வேட்பாளர்களின் பின்புலம்:
இந்த தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ-வான த.வேலு மீண்டும் களம் காண்கிறார். அவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும், மக்களோடு சகஜமாகப் பழகும் தன்மை கொண்டவர் என்பதாலும், பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் என்பதாலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார். பாஜக சார்பில், அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன் களம் காண்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
தவெக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் வெங்கடரமணன் நிறுத்தப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பம்மலைச் சேர்தவர். தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் விஜய்யை முன் நிறுத்தி வெற்றிபெற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் அருண் போட்டியிடுகிறார். கோவை மாவட்டம், காளப் பட்டியைச் சேர்ந்தவர். மக்கள் முழு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக் கையுடன் மயிலாப்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இது போக தமிழக திராவிடர் கட்சி சார்பில் மூர்த்தி, சுயேட்சையாக விஜய கிருஷ்ணா என்பவரும் மயிலாப்பூர் தொகுதியில் களம் கண்டுள்ளனர். பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் களத்தில் முந்துவது யார் என் பது போகப்போகத் தெரியவரும்.
வாக்காளர்கள் விவரம்:
ஆண்- 93,017, பெண்- 1,0 1,691, மூன்றாம் பாலினத்தவர்- 23, மொத்த வாக்காளர்கள்- 1,94,731.