

கோவை: கோவையில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தை விசில் ஊதிய நிலையில், விசிலை பறித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நேற்று விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி பள்ளி மாணவிகளின் கோலாட்ட நிகழ்வு நடந்தது.
அப்போது, சக மாணவியருக்கு நடன அசைவுகளை சொல்லித்தர, மாணவி ஒருவர் கழுத்தில் விசில் அணிந்திருந்தார். கோலாட்டம் ஆடத் தொடங்கியதும், மாணவி கழுத்தில் அணிந்திருந்த விசிலை ஊதினார். இதனை எதிர்பார்க்காத அதிகாரிகள் உடனடியாக மேடைக்கு ஏறி, விசிலை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து, விசிலை அதிகாரி ஒருவர் மேடையில் ஏறி கழற்றினார். இதனால் மாணவிகள் குழப்பம் அடைந்த நிலையில், பயிற்சி அளித்த ஆசிரியர் தொடர்ந்து ஆடும்படி உத்தரவிட்டார். இதையடுத்து குழந்தைகள் கோலாட்டத்தை தொடர்ந்தனர். தவெகவின் சின்னம் விசில் என்பதால், தேர்தல் நடத்தை விதிகளை காரணங்காட்டி உடனடியாக பறித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.