

படம்: ம.பிரபு
சென்னை: வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூலை 23, 24, 25 ஆகிய 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானியும், அதிகாரியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் 5 செ.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லார், சென்னை சோழிங்கநல்லூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, 21, 23, 25 ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் 22-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 26-ம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 25-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய், புதன் (ஜூலை 21, 22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதி, மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் ஜூலை 23-ம் தேதி வரையும், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூலை 25- ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி நாட்களில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.