

சென்னை: அந்தமான், நிகோபார் தீவுகளில் இந்த வார இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளை முதல் மே 18-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை, தெற்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளது. வடக்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக, நாளை (மே 13) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்திலும், 14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும், 15-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும், 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 18-ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 14, 15-ம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை முதல் 15-ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம ஆழியாரில் 5 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், கோவை மாவட்டம் பெள்ளாதியில் தலா 4 செமீ, கோவை மாவட்டம் உபாசி, ஒத்தக்கால் மண்டபம், கோட்டூரில தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.