போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ராமேசுவரம் தீவு!

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ராமேசுவரம் தீவு!
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் தீவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்களும், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகுகின்றனர்.

ராமேசுவரத்திற்கு ஆன்மிகப் பயணமாகவும், இங்குள்ள பாமபன் பாலம், தனுஷ்கோடி கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களை காண்பதற்காகவும் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை தினங்கள், வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்து விடுவதால் ராமேசுவரம், பாம்பன் பாலம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டர் ராமர் கோயில், அக்னி தீர்த்தக் கடற்கரை, சீதா தீர்த்தம், கலாம் நினைவிடம், திட்டக்குடி சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிக நேரம் ஏற்படுகிறது.

மேலும், ராமேசுவரத்தில் சராசரி நாட்களில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. ராமேசுவரம் வர வேண்டும் என்றால் பாம்பன் சாலை பாலம் வழியாக வாகனங்களிலே அல்லது ரயிலில் பாம்பன் ரயில் பாலம் மூலம் மட்டுமே வர முடியும்.

ராமேசுவரம் கோயிலுக்கு நேரடியாக வாகனங்களில் செல்ல முடியாதவாறு நான்கு ரத வீதிகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு செல்ல விரும்புபவர்கள் இரண்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் கூடுதலாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அது போல ராமேசுவரத்தில் குறுகிய அளவே அகலமுள்ள பல சாலைகளில் இருபுறங்களில் இருந்தும் வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு விடுகிறது.

போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகன ஓட்டிகள் சாலைகளில் பாதுகாப்பான முறையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே வாகன ஓட்டிகளின் விருப்பமாக உள்ளது.

இது குறித்து ராமேசுவரம் நகராட்சியினர் கூறும்போது, “ராமேசுவரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நகர் பகுதிக்குள்ளேயே வாகனங்கள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலாம் நினைவிடம் அருகிலிருந்து தீர்த்தக் கடற்கரை, கோயில் மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு 6.5 கி.மீ தூரம் தூரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுப்பாதை தயார் ஆனதும் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ராமேசுவரம் தீவு!
சி.வி.சண்முகம் அணியினர் உடன் முதல்வர் விஜய் சந்திப்பு - அதிமுகவில் சலசலப்பு அதிகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in