

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மே 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ராஜஸ்தான் முதல் குமரிக்கடல் வரை, கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள்தமிழகம் வழியாக, சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (மே 3) ஓரிரு இடங்களிலும், 4, 5, 6 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 7-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 8-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், 4-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
5-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும், 6-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 7-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்ட மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும், 8-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். 5, 6 தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்க்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.