“பா.ரஞ்சித் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” - அமைச்சர் ராஜ்மோகன்

“பா.ரஞ்சித் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” - அமைச்சர் ராஜ்மோகன்
Updated on
2 min read

புதுச்சேரி: “இயக்குநர் பா.ரஞ்சித் நம்பிக்கையை வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” தமிழக பள்ளிக் கல்வி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

புதுச்சேரியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற டாப் ரேங்கர்ஸ் பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சர் ராஜ்மோகன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக பாடத்திட்ட தலைவராக விஞ்ஞானி மயில்சாமியை நியமித்த பின்னர் கணித பாடத்தையே கதைகள் வழியாக சொல்லிக் கொடுக்க கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதுபோல் ஏஐ (செற்கை நுண்ணறிவு) மட்டுமின்றி இயற்கை நுண்ணறிவையும் கற்றுத்தர உள்ளோம்.

ஏஐ அறிமுகம் மட்டுமின்றி ஏஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் சேர்த்து கற்றுத்தர உள்ளோம். ஏற்கெனவே பல ஆயிரம் பள்ளியில் ஆரம்பித்துவிட்டோம். 3-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் கொடுத்துவிட்டோம். அடுத்தடுத்த வகுப்புகளில் தொடங்குவோம். வெகு விரைவில் அமலுக்கு வரும்.

இதுவரை இல்லாத வகையில் குழந்தைகளை முன்னிலைப்படுத்தி பாடத்திட்டம் வகுத்துள்ளோம். பெண்ணுரிமை, மண்ணுரிமை, தமிழ், தமிழர் நலன், பெண்களை மதிப்பது, பெற்றோர்களை மதிப்பு, பாடப் புத்தகம் அளவு குறைப்பு போன்றவற்றை கொண்டுவர உள்ளோம்.

புத்தகச் சுமை குறைத்து மன சுமையை குறைக்கிறோம். எனவே, காலஅவகாசம் தேவைப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் கமிட்டியை கூட்டி தமிழகத்தின் மொத்த கல்வித் திட்டமும் குழந்தை மைய கல்வியாக மாறப்படுகிறது. புதிய காலம் பிறப்பிக்கப் போகிறது” என்றார்.

‘காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர், கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?’ என்றதற்கு, “மாநிலம் விட்டு மாநிலம் செல்வதாக இருந்தாலும், தேசிய பிரச்சனைக்கோ நதிநீர் பிரச்சினைக்கோ எங்கு செல்வதாக இருந்தாலும் முதல்வர் சொல்வது மட்டுமே அதிகாரப்பூர்வமானது. நன்கு பேசி ஆலோசனை செய்து முதல்வரே அறிவிப்பார். யார் சொல்வதும் அதிகாரப்பூர்வமானதல்ல. அது உறுதியான தகவல் அல்ல” என்றார்.

‘நீட் தேர்வை எதிர்க்கும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை கைது செய்வது ஏன்?’ என்ற கேள்விக்கு, “நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு, கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும். நீட் எதிராக போராடுபவர்களுக்கு அச்சுறுத்தல், வன்முறை கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளோம். முழுமையாக இளைஞர்களின் போராட்டத்துக்கு தவெக ஆதரவு தரும்.

நீட் எதிர்ப்பு போராட்டம் என்பது இளைஞர்களின் போராட்டம், அவர்களுக்கு தொந்தரவு தராமல் இருப்பதுதான் நல்லது. கடந்த காலம் போல் கூட்டணி கட்சிகள் ஏதும் பேசக்கூடாது என சொல்லமாட்டோம்” என்றார்.

‘தமிழக அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்கள் இருந்தும், வன்னி அரசு தவிர மற்றவர்கள் யாரும் தலித் பிரச்சினைகளுக்கு பெரிதாக குரல் கொடுக்கவில்லை’ என்ற இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்துக்கு பதிலளித்த அவர், “பதிலுக்கு பதில் சொன்னால் நன்றாக இருக்காது. ரஞ்சித் நம்பிக்கையை வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” என்றார்.

முன்னதாக, விழாவுக்கு வந்த தமிழக அமைச்சர் ராஜ்மோகனை புதுச்சேரி ஆளுங்கட்சி எம்எல்ஏ ரவிக்குமார் ரூபாய் நோட்டுகள் கொண்ட பொக்கேவை கொடுத்து வரவேற்றார். அப்போது, “ரூபாய் நோட்டுகளில் போக்காவா?” என ஆச்சரியத்துடன் வாங்கிப் பார்த்தார்.

“பா.ரஞ்சித் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” - அமைச்சர் ராஜ்மோகன்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா - சிஜேபி போராட்டக் களத்தில் கொண்டாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in