மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா - சிஜேபி போராட்டக் களத்தில் கொண்டாட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா - சிஜேபி போராட்டக் களத்தில் கொண்டாட்டம்
Updated on
4 min read

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

“டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்; மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தர்மேந்திர பிரதான் தனது ராஜினமாவை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். ஒரு வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வி முறையே ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்பி வந்துள்ளேன்.

நாட்டின் இளைஞர்களின் விருப்பங்கள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்து மதிக்கிறேன். இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது, அரசியல் மற்றும் சமூக வாழ்வில் நம் அனைவரின் தார்மிகக் கடமையாக இருந்து வருகிறது. பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்துக்கு சேவை செய்ய எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட்-யுஜி (NEET-UG) தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதைக் கவனத்தில் கொண்டு உடனடியாக இந்திய அரசு, விசாரணையை சிபிஐ-யிடம் (CBI) ஒப்படைத்து, தேர்வை ரத்து செய்து, மறு அட்டவணையை வெளியிட்டது. அடுத்த ஆண்டு முதல் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் தேர்வை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தேர்வு தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமையாக இருந்தது. இந்த நோக்கத்துக்காக, இந்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் ஜூன் 21, 2026 அன்று தேர்வு நிறைவடைந்தது.

முதல் நாளிலிருந்தே இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இதில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்கவில்லை. எந்தவொரு திறமையான மாணவரின் எதிர்காலமும் தேர்வு மாஃபியாவால் பாதிக்கப்படக் கூடாது என்றும், எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் நான் உறுதியாக இருந்தேன்.

ஜூலை 16 அன்று அறிவிக்கப்பட்ட நீட்-யுஜி (NEET-UG) தேர்வு முடிவுகள் திருப்திகரமாக இருந்தன. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பல திறமையான மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

இருப்பினும், பொறுப்புள்ள பதவிகளில் இருந்த சில தனிநபர்கள், பல மாணவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றனர். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

நமது ஜனநாயகத்தின் சக்தியின் மீது எனக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இளைஞர்களின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்து மதிக்கிறேன். அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒரு புதிய; வளர்ச்சியடைந்த இந்தியாவின் சிற்பிகள்.

கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளால் நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தனிப்பட்ட கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.

இந்தியாவின் இளைஞர் சக்தியே இந்த நாட்டின் உண்மையான பலம்.

நாட்டின் இளைஞர்கள் மாயைகளின் தீய வட்டத்திற்குள் வீழ்வதை நான் அனுமதிக்க மாட்டேன், இதுவே எனது உறுதி.

ஜந்தர் மந்தரிலும் நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன். நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும்.

இந்தியாவில் ஒரு மாணவரின் எதிர்காலம் கூட சட்டச் சிக்கல்களில் சிக்கக்கூடாது. நமது பிள்ளைகள் தங்கள் நேரத்தை படிப்பிற்கு அர்ப்பணித்து, தங்கள் தொழில் வாழ்க்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இதை மனதில் கொண்டு, எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்.

பிரதமரின் வழிகாட்டுதலுக்கும், நம்பிக்கைக்கும், தொடர்ச்சியான ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரவையில் உள்ள எனது மதிப்புக்குரிய சக ஊழியர்களுக்கும், அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசத்துக்கு சேவை செய்வதே என் வாழ்வின் தலையாய முன்னுரிமை. நான் எப்போதும் அதற்கே என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்.

புரி ஜெகந்நாதரின் அருளால், இந்திய மக்களின், ஒடிசா மக்களின், நாட்டின் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக, என்னால் இயன்ற எல்லா வழிகளிலும் என்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொள்வேன்” என்று தர்மேந்திர பிர்தான் தெரிவித்துள்ளார்.

அபிஜித் தீப்கே கூறியது என்ன?

தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை அடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “இது அமைதிக்கும் பொறுமைக்கும் கிடைத்த வெற்றி. ஜென்ஸீ பட்டாளத்துக்கு வாழ்த்துகள்” என்று 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் குறிப்பிட்டுள்ளார்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை அடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் ஆரவாரத்துடன் அதனை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இசை இசைத்தும், நடனமாடியும் அவர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்துப் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, “நாங்கள் சாதித்துவிட்டோம். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். நீங்கள் அச்சப்படாவிட்டால், அரசின் முன்பாக தலை குனியாவிட்டால் எவரையும் ராஜினாமா செய்ய வைக்க முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது. இது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி.

அமைதியான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது. அமைதியான முறையில் போராடினால் அது வீணாகாது. கரப்பான்பூச்சிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஜனநாயகம் வெற்றி பெற்றுவிட்டது” என தெரிவித்துள்ளார். நாடு முழுவதுமே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, வினாத்​தாள் கசிவு முறை​கேட்​டில் ஈடு​படுவோருக்கு அதி​கபட்​சம் 10 ஆண்டு சிறை தண்டனை​யும், ரூ.10 கோடி அபராத​மும் விதிக்​க வகை செய்யும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

டெல்லி போராட்டம் நிறைவு:

இந்நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட உடன்பாட்டுக்கு இணங்க, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆசுதோஷ் ரங்கா, “நாங்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தோம். தற்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார். இதன்மூலம், எங்கள் முதல் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இழப்பீட்டைப் பொறுத்தவரை, நடைமுறையில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கவுரவமான இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

வழக்குகளை திரும்பப் பெறும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது. மூன்று முதல் நான்கு நாட்களில் முதல் தகவல் அறிக்கைகளின் நகல்களை பகிர்ந்து கொள்வதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர். இதை புரிந்துகொண்டு நாங்கள் அரசாங்கத்திடம் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை அளித்துள்ளோம். தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக நாங்கள் அளித்த ஐந்து அம்ச சீர்திருத்த யோசனைகள் தொடர்பாக நான்கு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் அரசாங்கத்தைச் சந்திப்போம்” என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சவுரவ் தாஸ், “ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், நல்லெண்ணத்தின் பேரில் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக சிஜேபி அறிவிக்கிறது” என தெரிவித்தார். இதன்மூலம், சுமார் ஒரு மாத காலமாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

புதிய கல்வி அமைச்சர்:

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று இந்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். தற்போது மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷி, கூடுதல் பொறுப்பாக கல்வித் துறையை கவனிக்க உள்ளார்.

<div class="paragraphs"><p>மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி</p></div>

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

63 வயதான பிரகலாத் ஜோஷி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தார்வாட் மக்களவை தொகுதியின் உறுப்பினராக உள்ளார். மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்வித் துறை அவருக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு, கல்வி சீர்திருத்தம் என பல்வேறு சவால்களை இத்துறை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தப் பொறுப்பை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா - சிஜேபி போராட்டக் களத்தில் கொண்டாட்டம்
‘பெல்லட்’ குண்டுகள் என்ன செய்யும்? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in