

பெரம்பலூர்: இருமொழிக் கொள்கையை விட்டுக்கொடுத்து தான் மத்திய அரசிடம் நிதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேசமயம், மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறாமல் விடமாட்டோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஷரண்யா அறி, எஸ்.பி. லலித்குமார், எம்எல்ஏ சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: இருமொழிக் கொள்கையை விட்டுக்கொடுத்துதான் மத்திய அரசிடம் நிதி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேசமயம் மத்திய அரசின் நிதியையும் பெறாமல் விடமாட்டோம்.
முந்தைய ஆட்சியில் கல்வித் துறையில் ஊழல் பெருகி இருந்தது. தற்போது, தவெக ஆட்சியில் நடத்திய ஆய்வில் ஒவ்வொரு துறையாக ஊழல் வெளிவந்துகொண்டிருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுக்குப் பிறகு ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.