“முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் லண்டன் சென்றிருக்கக்கூடாது” - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Updated on
2 min read

மதுரை: முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் விஜய் லண்டன் சென்றிருக்கக்கூடாது என ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இந்த இயக்கம் மிக விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மதுரையில் ‘வீ த லீடரஸ்’ அமைப்பு சார்பில் வைகை ஆறு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு வைகை சிற்பி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை விருதுகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: மதுரை வைகை ஆற்றில் ஆக. 3-ல் இருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம் உட்பட 33 ஏக்கர் பகுதியை சுத்தம் செய்துள்ளோம். இப்பணியில் 163 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகளின் மனித கழிவுகள் கலக்கின்றன.

தமிழகத்தில் புதிய அரசியலை, புதிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ‘வீ த லீடரஸ்’ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 10.17 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அமைப்பு தொடங்கி 105வது நாளில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஒவ்வொரு நாளும் புதிய உயரத்துக்கு சென்று வருகிறோம். மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும். இது தான் மாற்றம். நம் இலக்கு பெரியது. குப்பைகளை மட்டும் அள்ளினால் போதாது. அரசியல் குப்பைகளையும் அள்ள வேண்டும். அதற்கான காலம் வந்துள்ளது.

சுற்றுச்சூழல், மொழி, பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும். தவெக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக அங்கீகரிக்க குரல் கொடுப்பதாக கூறியிருந்தனர். அந்த கட்சியின் சோழவந்தான் எம்எல்ஏ சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிப்பதாக பேசியுள்ளார்.

அந்த நேரத்தில் பேரவையில் இருந்த தமிழக முதல்வர் அப்போதே தவெக எம்எல்ஏ பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்க வேண்டும். தவெக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது தெரியாதவர்களாக தவெகவினர் உள்ளனர்.

நாட்டு மாடுகளை வளர்க்க ஜல்லிக்கட்டு உந்துதலாக உள்ளது. ஜல்லிக்கட்டு மிகப்பெரிய வரலாறு கொண்டது. சட்டப்பேரவையில் தவறாக பேசாதீர்கள். இதுபோன்ற பேச்சுகள் மதுரை மக்களை காயப்படுத்தும்.

மொழி, இனத்தை, தேசிய உணர்வுகளை பட்டி தொட்டிகளில் விதைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. சரியான தேசியத்தை வளர்க்க வேண்டும். தமிழன் என்பதுபோல் இந்தியன் என்பதும் நமக்கு பெருமைதான். நம் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அதற்காக இன்னொரு மொழியை படிக்க வேண்டாம் எனக் கூறக்கூடாது.

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு பாஸ்களை பிளாக்கில் சினிமா டிக்கெட் விற்பது போல் விற்பனை செய்துள்ளனர். விஐபிக்கள் மட்டுமே குடமுழுக்கை பார்த்தனர். பொதுமக்களை அனுமதிக்கவில்லை.

கோயிலின் மாட வீதிகள் விஐபிக்களின் வாகனங்களை நிறுத்தவா உள்ளன? நான்கு பேருக்கு மட்டுமே தீர்த்தம் தெளித்தார்கள். மற்றவர்களின் மேல் தண்ணீர் தான் தெளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டிய போலீஸாரை பொதுமக்கள் மீது தண்ணீரை தெளிக்க பயன்படுத்தியுள்ளனர்.

கோயிலில் செல்போன் தடை நியாயம் அல்ல. சினிமா தியேட்டர்கள், கல்யாண மண்டபங்களில் செல்போன்களுக்கு தடை விதிப்பீர்களா? இப்படி செய்தால் கோயிலுக்கு வரும் இந்து பக்தர்களின் எண்ணிக்கை குறையும். இதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது நாம் தான். எல்லோருக்குமான இயக்கமாக இருப்போம்.

தமிழக சட்டப்பேரவையில் எதை எதையோ பேசுகிறார்கள். பேச வேண்டியதை பேசுவதில்லை. சபாநாயகரில் தொடங்கி தவெக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றனர். இதற்கு தான் சட்டப்பேரவை உள்ளதா?

மக்கள் நம்மை உண்ணிப்பாக கவனிக்கிறார்கள். நம் பிரச்சினைகளை பேசுவார்களா? பொருளாதாரத்தை சரி செய்யும் வல்லமை உள்ளவர்களா? இவர்களிடம் ஆட்சியை கொடுத்தால் தொழில் புரட்சியை ஏற்படுத்துவார்களா? வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்களா? என நினைக்கிறார்கள். நம் செய்யும் ஒவ்வொரு வேலையும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பெரியாரை முழுமையாக ஏற்கவில்லை. பெண் விடுதலை, சாதி ஒழிப்பு ஏற்கிறோம். கடவுள் மறுப்பு கொள்கை, பிரமாணர்கள் எதிர்ப்பு ஏற்கவில்லை. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்புள்ள கடவுள் மறுப்பு கல்வெட்டு அங்கிருந்து அகற்றப்படும். அரசியல் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

யாரையும் ஏமாற்றி வாக்குகளை பெற நினைக்கவில்லை. இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறுவது உறுதி. அந்த நாள் நான் நினைத்ததை விட மிக மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கக்கூடாது. இங்கிலாந்து நாட்டில் பணமே இல்லை. அங்கு ஒரு சதவீத வளர்ச்சி தான் உள்ளது. அங்கிருந்து எப்படி தமிழகத்துக்கு முதலீடு வரும். முதல்வர் கோவைக்கும், மதுரைக்கும் வந்து தொழிலதிபர்களிடம் பேசி சலுகைகள் தருவதாக கூறி தொழில்களை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யுமாறு கூற வேண்டும்.

வெளிநாட்டு நாடகங்களை விட்டு உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், சந்தைப்படுத்தவும் வேண்டும். இருப்பினும் தவெக அரசுக்கு ஒரு ஆண்டு நேரம் கொடுக்க வேண்டும். நாளைக்கு நாம் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு ஆண்டு நேரம் வேண்டும். ‘வீ த லீடரஸ்’ இயக்கத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 30 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>அண்ணாமலை </p></div>
இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் உட்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in