

மதுரை: “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வது நிச்சயம், 200-க்கும் மேல் வெல்வது லட்சியம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை மாநாட்டில் பேசினார்.
‘மதுரையில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் குழு பயிற்சி மாநாடு இன்று (பிப்.21) நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது: “மாநாட்டில் கூடியிருக்கும் வாக்குச்சாவடி முகவர்களை பார்க்கும்போது என் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
‘இனி எப்போதும் நாம்தான்’ என்ற நம்பிக்கையுடன் நான் இருப்பதற்கு காரணம் திமுகவின் வேர்களாக இருக்கும் நீங்கள்தான். வாக்குச்சாவடி குழுவினர் நியமனத்தை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தொடங்கிவிட்டோம்.
களப்பணியில் இருக்கும் முகவர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டங்களை நானே நேரில் சென்று நடத்தியுள்ளோம். அதனால்தான் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றோம். அடுத்து புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி இந்தியாவில் எந்த கட்சியும் செய்ய முடியாத ஒரு தனி செயலியை தொடங்கி, வீடு வீடாக சென்று 1.10 கோடி குடும்பங்களை உறுப்பினர்களாக சேர்த்தோம்.
அடுத்த பணி உடனடியாக வந்தது. அதுதான் எஸ்ஐஆர். எஸ்ஐஆரில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளும் நீக்கவிடாமல் பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. அடுத்து தேர்தலுக்கு தயாராக வாக்குச்சாவடி முகவர் குழுக்களை சந்தித்து வருகிறேன்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் வாக்குச்சாவடி அடிப்படையில் தமிழகத்தில் 75,032 பிஎல்ஏக்கள் உள்ளனர். பிஎல்சிக்கள் 55,000 பேர், பிடிஏக்கள் 75,032 பேர் உள்ளனர். வரும் தேர்தல் களத்தில் வெற்றியை உறுதி செய்வது இவர்கள்தான்.
திருவிடந்தையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் 1.30 லட்சத்துக்கும் அதிகமானோர், திருப்பத்தூரில் நடைபெற்ற மாநாட்டில் 1.26 லட்சம் பேர் பங்கேற்றனர். மதுரை மாநாட்டில் 1.56 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். அடுத்து வரும் 27-ம் தேதி கோவையில் மேற்கு மண்டல மாநாடு நடக்கவுள்ளது.
கடந்த 2 மாதத்தில் மட்டும் இளைஞரணி, மகளிரணி என 7 மாநாடுகள் நடத்தப்பட்டு 9.30 லட்சத்துக்கும் அதிகமானோரை சந்தித்து பேசியிருக்கிறேன். இதனால் சவால் விட்டு சொல்கிறேன். இந்த அளவுக்கு நம்மைப் போல் பூத் அளவில் நிர்வாகிகள், இளைஞர்கள், மகளிர்கள் என இப்படி தேர்தலுக்கு ஆயத்தாகும் கட்சியை இந்தியாவில் யாராலும் காட்ட முடியாது.
திமுக மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம். பெரியார், அண்ணா, கலைஞரின் ரத்தம். இந்த இயக்கத்தை தொட்டுப்பார்க்க வேண்டும், சீண்டி பார்க்க வேண்டும் என நினைத்தாலே தமிழ்நாடு பதிலடி கொடுக்கும் என்ற பயத்தால் எதிரிகள் அஞ்சி நடுங்குகின்றனர். திமுகவைப் போல் அமைப்பு ரீதியான வலுவான அரசியல் கட்சியை யாராலும் காட்ட முடியாது. இப்போது நாம் காட்டுவது எல்லாம் வெறும் டிரைலர் தான். திருச்சியில் மெயின் பிக்சர் காண்பிக்க தயாராகி வருகிறோம்.
திருச்சியில் மார்ச் 9-ல் பத்து லட்சம் பேர் திரள்வார்கள். திருவண்ணாமலை தொடங்கி அடுத்த மாதம் திருச்சி மாநாடு வரை 3 மாதத்தில் 20 முதல் 25 லட்சம் பேரை சந்திக்க உள்ளேன். நாம் ரெக்கார்டு செய்தால், அது யாராலும் உடைக்க முடியாத ரெக்கார்டாக இருக்க வேண்டும். பெரிய மாநாடு மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் காலை, மாலை என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் கருப்பு சிவப்பு கொடிதான் தெரிகிறது. திமுக கொள்கைகள்தான் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது. திராவிட மாடல் அரசின் சாதனைகள் உரக்கக் கேட்கிறது. இதுதான் கள நிலவரம். தெற்கு சீமையில் மொத்த தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும். அனைத்து தொகுதிகளையும் தட்டி தூக்க வேண்டும்.
திமுக கூட்டணி 2019 முதல் எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறது. 2024 எம்பி தேர்தலில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாதபடி முழுமையாக வெற்றிபெற்றோம். அப்போதை விட இப்போது அதிக திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மக்கள் கேட்காத திட்டங்களையும் வழங்கி இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளோம். அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் தீர்த்து வைத்துள்ளோம். இதனால் இந்த தேர்தலில் உங்கள் மூலம் மிகப் பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறோம்.
மக்களின் மகிழ்ச்சி, உடன்பிறப்புகள் மீது நம்பிக்கை வைத்து இதை சொல்கிறேன். நீங்கள் இருக்கும் போது எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அனைத்து பகுதிகளிலும், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம் என்ற செய்திதான் மிக மிக முக்கியம். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். அதற்காகத்தான் இந்தக் கூட்டங்கள், மாநாடுகள்.
ஒவ்வோரு பூத்துக்கும் 350 வாக்குகள்தான் டார்க்கெட். இதை நிறைவேற்றினாலே 2.60 கோடி வாக்குகளை வாங்க முடியும். 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் வாக்குகளை வாங்க வேண்டும். இதை வாங்கிக் காட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு தேவையானதை செய்து தருவது என் பொறுப்பு. ஆளுக்கு 40 அல்லது 50 வாக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். இலக்கை நிறைவேற்றிவிடலாம். 200 தொகுதிகள் நிச்சயம், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது நம்முடைய லட்சியம். அடுத்த 2 மாதம் உங்களுக்கும், எனக்கும் ஓய்வில்லை. ஒவ்வொரு வாக்காளர்களையும் குறைந்தது 5 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும்.
என்னதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் வந்தாலும் வீடு வீடாக படியேறி சென்று கையெடுத்து கும்பிட்டு வாக்குகள் கேட்பதற்கு ஈடாகாது. ஆன்லைன் செயல்பாடு முக்கியம்தான். அதை மறுக்கவில்லை. களத்தில் வேலை செய்தால்தான் மதிப்பு இருக்கும். பரம்பரை பரம்பரையாக திமுகவுக்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும், இதுவரை வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் பிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
சாதனைகளை சொல்லி, வாக்குறுதிகளை சொல்லி ஓட்டு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதை திரும்ப திரும்ப செய்தால் நமக்கு வெற்றியும் திரும்ப கிடைக்கும். வாக்காளர்கள் பூத்துக்கு வந்து வாக்களிக்கும் வரை ஓய்வே இருக்கக்கூடாது. பணிவாக, கனிவாக, மரியாதையாக, நட்பாக அணுக வேண்டும். மக்கள்தான் எஜமானர்கள். நாம் அவர்களின் சேவகர்கள். மக்களை சந்தித்து, அவர்களின் இன்ப, துன்பங்களின் போது கூடவே நிற்பதால்தான் அவர்களும் நம்முடன் நிற்கிறார்கள்.
75 ஆண்டுகளாக திமுக வலிமையாக நிற்க இதுதான் ரகசியம். வாக்குப்பதிவு முடிந்து சீல் வைத்து வண்டியில் ஏற்றும் வரையும், கடைசி வாக்கு எண்ணி முடிக்கும் வரை கவனமாக இருக்க வேண்டும். தேர்தல் தேதியை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கட்டும். நாம் எப்போதோ பரப்புரையை தொடங்கிவிட்டோம்.
ஸ்டாலின் மகளிர் படை மூலம் அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டுச் செல்ல சொல்லியிருக்கிறேன். குறிப்பாக தேர்தலை காரணமாக வைத்து மகளிர் உரிமை தொகையை முடக்க நினைத்த சதியை முறியடித்து மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியதையும், அடுத்து வரும் ஆட்சியில் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க இருப்பதையும் வீடு வீடாக சொல்ல கூறியிருக்கிறேன்.
திரவிாட மாடல் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தில் அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதனால் தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ளது. இது எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. இந்த ஆட்சி தொடர்ந்தால் தான் மகளிர் உரிமை தொகை போன்ற சமூக வளர்ச்சித் திட்டங்கள் தொடரும் என்பதை மக்களை உணர வைக்க வேண்டும்.
அண்மையில் மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியதை சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றனர். அந்தளவு எதிரிகள் கணிக்க முடியாதபடி நம் செயல்பாடுகள் இருந்தது. மத்திய அரசு மீது இருக்கும் பயத்தால் ரூ.5 ஆயிரத்தை உடனடியாக எடுக்க பெண்கள் வங்கிகளுக்கு படையெடுத்தனர். மக்களுக்கு பணம் கொடுத்தால் அது திமுக அரசு, பணத்தை பறித்தால் பாஜக அரசு. இதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரதமர் மோடி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. திமுக அரசின் மகளிர் இலவச பேருந்து பயணத்தால் ஒவ்வொரு பெண்களும் மாதம் ரூ.800 வரை சேமிக்கின்றனர். இது பிரதமருக்கு வலிக்கிறது.
பிரதமர் மோடி மார்ச் 1-ல் மதுரை வருகிறார். அவரிடம் மதுரை, கோவைக்கு ஏன் மெட்ரோ ரயில் வரவில்லை? தமிழகத்துக்கு ஏன் எந்த சிறப்பு திட்டமும் தரவில்லை? கீழடி அறிக்கையை ஏன் வெளியிடவில்லை? எய்ம்ஸ் ஏன் வரவில்லை? நீட் விலக்கு ஏன் தரவில்லை? கல்வி நிதியை முடக்குவது நியாயமா என மக்கள் கேட்க வேண்டும்.
நியாயமாக எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி, தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கோரிக்கையாக கூட கேட்க துணிச்சல் இல்லாத துரோகியாக மாறிவிட்டார். பழனிச்சாமி போல் பயந்தாகொள்ளி இல்லை நான். ஆட்சி, பதவி இல்லை, உயிரே போனாலும் கவலைப்படமாட்டோம். வழக்கு போட்டால் போடு, நாங்கள் பார்க்காத மிசாவா, தடாவா?
இந்தியாவில் இருக்கும் எதிர்கட்சிகளில் திமுக மீது தான் பாஜக அதிகளவில் ரெய்டு நடத்தியது. நம் அமைச்சர்களுக்கு அதிகளவில் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த பார்க்கிறார்கள். எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் திமுக. சிபிஐ, ஈ.டி, ஐடி என எந்த சித்து விளையாட்டுகளுக்கும் அஞ்சமாட்டோம். அதற்கு வேறு ஆளை பாருங்கள். என்ன ஆனாலும் ஒரு கை பார்ப்போம். எழுந்து நிற்போம்.
தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடுவதால் மக்கள் ஆதரவு அளிக்கின்றனர். அதனால் எல்லா தேர்தல்களிலும் ஜெயிக்கிறோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அதை புத்தகமாக அளித்துள்ளோம். அதை மக்களிடம் அளித்து வாக்கு சேகரியுங்கள்.
இந்தியாவில் எந்த மாநிலமும் எட்ட முடியாத வளர்ச்சியை பெற்றுள்ளோம். சாதனை செய்யாத நாளே கிடையாது. தினமும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். எனக்கே நினைவில் வைக்க முடியாத அளவில் சாதனைகள் மறந்துவிடுகிறது. இதனால் சாதனைகளை தெரிந்து கொண்டு மக்களிடம் நினைவுபடுத்துங்கள்.
தேர்தல் பணியில் நாம்தான் முன்னணியில் உள்ளோம். கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகின்றன. தொகுதி பங்கீடு பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. யாருக்கு எந்த தொகுதி, யார் வேட்பாளர்கள் என்பதை தலைமை கழகம் பார்த்துக்கொள்ளும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்களின் கடமை. நம் கட்சி வேட்பாளர் மட்டும் அல்ல, கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க கடுமையாக உழைக்க வேண்டும். நம் களப்பணியை பார்த்து கூட்டணி கட்சியினர் வியக்க வேண்டும்.
தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என கேள்வி எழுப்புங்கள். தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்றால் திமுக கூட்டணி ஜெயிக்க வேண்டும். அடிமை அதிமுகவும், தமிழ் விரோத பாஜகவும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும். நான் மீண்டும் முதல்வராக வர வேண்டும். தமிழ்நாடு எல்லா துறைகளிலும் தொடர்ந்து முன்னணியில் இருக்க வேண்டும்.
இந்தி திணிப்பை எதிர்க்க, மாநில சுயாட்சியை நிலைநாட்ட, மக்கள் நலத்திட்டங்கள் தொடர, தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலமாக இருக்க, தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணம் தொடர, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க, தமிழ்நாட்டின் சுயமரியாதையை காத்திட, தமிழ்நாடு தலைகுனியாமல் இருக்க, பாசிச பாஜகவை வெல்ல, அடிமை அதிமுகவுக்கு பாடம் கற்பிக்க, இந்தியாகவிற்கே தமிழ்நாடு வழிகாட்ட எல்லோரும் சொல்வோம் வெல்வோம் ஒன்றாக” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.