மதுரையில் ரூ.213 கோடி மதிப்பிலான புதிய மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்

மதுரையில் ரூ.213 கோடி மதிப்பிலான புதிய மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்
Updated on
1 min read

மதுரை: மதுரை கோரிப்பாளையம் முதல் நெல்பேட்டை வரை ரூ.213 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மதுரையில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை இன்று காலை வந்தடைந்தார். பின்னர், அவர் மதுரை வடபழஞ்சி எல்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பினாகிள் இன்ஃபோடெக் நிறுவனத்தின் விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதையடுத்து, தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை திறந்து வைத்தார். வைகை ஆற்றில் ஆல்பர்ட் விக்டர் பாலத்துக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம், 1305 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. சேவைச் சாலை பாலத்தின் இடதுபுறத்தில் 7.50 மீட்டர் அகலத்திற்கு இரண்டு வழித்தடமாகவும், வலது பகுதியில் 10.5 மீட்டர் அகலத்துக்கு மூன்று வழிதடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மேம்பாலம், செல்லூர், தல்லாகுளம், தமுக்கம், நெல்பேட்டை, அண்ணாநகர், மதுரை மத்திய பகுதிகளுக்கிடையேயான போக்குவரத்தை எளிதாக்கி, பொதுமக்களின் பயண நேரத்தை குறைப்பதுடன், சாலை பாதுகாப்பையும் மேம்படுத்தும். மேலும், அவசர சேவை வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் விரைவாகச் செல்ல வழிவகுப்பதன் மூலம் நகரின் மொத்த போக்குவரத்து திறன் மற்றும் நகர்ப்புற இணைப்பை மேம்படுத்தும்.

தொடர்ந்து அவர், திருமங்கலம் - கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.38.81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டப்பொம்மன் சாலை மேம்பாலம், சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் ரூ.1.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள் சிலை ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர், அவர் ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஹெச்பி கணினி திறன் மேம்பாட்டு மையத்தை தொடங்கி வைத்தார்.

மதுரையில் ரூ.213 கோடி மதிப்பிலான புதிய மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்
தவெக தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்தார் விஜய்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in