அரசு அறிவித்த 45 நாட்களைக் கடந்தும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தொடரும் நீர் திறப்பு

அரசு அறிவித்த 45 நாட்களைக் கடந்தும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தொடரும் நீர் திறப்பு
Updated on: 
1 min read

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் காலக்கெடு முடிந்தும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நிகழாண்டில் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால், ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 90 அடியைக் கடந்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு 45 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் தண்ணீரைக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் நெல் சாகுபடிப் பணிகளைத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். செப்டம்பர் 1-ம் தேதி முதல் நேற்று வரை 45 நாட்களில் டெல்டா பாசனத்துக்கு 44 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 14 நாட்களில் அணையின் நீர்மட்டம் 17 அடி வரை சரிந்துள்ளது. அரசு அறிவித்தபடி, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று (அக். 15) தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட இருந்தது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்டா பாசனத்துக்கு 45 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்க வேண்டும் என அரசாணை எதுவும் இல்லை. அணையில் நீர் இருப்பு இருக்கும் வரை தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். தண்ணீர் திறப்பை நிறுத்துவது குறித்து இதுவரை முறையான அறிவிப்பு வரவில்லை. மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும். இருப்பினும், பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படும்’ என்றனர்.

நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 677 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 534 கனஅடியாகக் குறைந்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் நீர் திறப்பு 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.அணையின் நீர்மட்டம் 57.98 அடியாகவும், நீர் இருப்பு 23.20 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ள நிலையில், பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், எதிர்வரும் காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அரசு அறிவித்த 45 நாட்களைக் கடந்தும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தொடரும் நீர் திறப்பு
ஆளுநர் அர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு: முழுநேர ஆளுநராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in