முதல்வர் விஜய், ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்
சென்னை: தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.வி.அர்லேகரை முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இந்தச் சூழலில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. முதல்வராக விஜய் பதவியேற்றார். அவரது தலைமையிலான அமைச்சரவைக்கு, பொறுப்பு ஆளுநர் அர்லேகர் மே 10-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து ஆளுநருடன் இணக்கமான போக்கை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது.
சட்டப்பேரவையில் ஆளுநரின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் முதலில் பாடப்பட்டது. அதேபோல், தவெகவின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13-ல் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பொறுப்பு ஆளுநராக இருந்த ஆர்.வி.அர்லேகர், தற்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 12-ம் தேதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதல்வர் விஜய், நேற்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பொறுப்பேற்றுள்ளதற்கு
வாழ்த்துத் தெரிவித்தார். நிலுவையில் வைக்கப்பட்டுள்ள துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட சில மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் முதல்வர் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவும் ஆளுநருடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தற்போதைய தவெக அரசில் சில அமைச்சர்களின் செயல்பாட்டில் முதல்வர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதனால், சிலரை மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகவும், அதிக துறைகளை வைத்துள்ள அமைச்சர்களிடம் உள்ள துறைகளை பிரித்து வழங்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் இன்று ரோடு ஷோ
தமிழக பொதுப்பணித்துறை சார்பில், கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் காந்திபுரம் வரை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ செல்லும் முதல்வர், மக்களை சந்திக்கிறார். முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெரியார் அறிவுலகம் திறப்பு நிகழ்வு முடிந்தவுடன், முதல்வர் விஜய் கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் திருச்சூருக்கு செல்கிறார். இதற்காக கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. திருச்சூரில் கல்யாண் ஜூவல்லர்ஸ் குழுமத்
தினர் இல்லத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.