தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உணவு, கூட்டுறவுத்துறை செயலர் வெளியிட்ட அரசாணையின் விவரம்: கடந்த 2021-ம் ஆண்டு கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றி நிர்ணயிக்கப்பட்டது. கடந்த பிப்.21-ம் தேதி இந்த ஊதிய விகித நிர்ணயம் 5 ஆண்டுகளை கடந்தது. இதையடுத்து, புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் பெறப்பட்டது. இந்த பரிந்துரைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அரசு அதை பரிசீலித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்தது முதல் ஓராண்டு வரை விற்பனையாளர்களுக்கு ரூ.7,500 மற்றும் கட்டுநர்களுக்கு ரூ.6,600 தொகுப்பூதியம் வழங்கப்படும். ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு, விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ39,600 வரையிலும், கட்டுநர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு முந்தைய ஊதிய கற்றையில் தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தை கணக்கில் கொண்டு அதற்கு 15 சதவீதம் சேர்த்து வரும் கூடுதல் தொகையை அடுத்த 10 ரூபாய்க்கு முழுமையாக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

புதியதாக நிர்ணயிக்கப்படும் அடிப்படை ஊதியத்தில் 55 சதவீத அகவிலைப்படி பெற அனுமதிக்கப்படுகிறது. பின்னர், அரசு ஊழியர்களுக்கு அவ்வபோது அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வு இவர்களுக்கும் பின்பற்றப்படும். தற்போது நடைமுறையில் உள்ள 3 சதவீத ஆண்டு ஊதிய உயர்வும் தொடர்ந்து வழங்கப்படும்.

அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு ரூ.1500 மற்றும் ரூ.1200, இதில் எது குறைவோ அது வழங்கப்படும். இதர பகுதிகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ரூ.1,200 மற்றும் ரூ.1,000 இவற்றில் எது குறைவோ அது வீட்டு வாடகைப்படியாக வழங்கப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் அல்லது, சென்னை மாநகராட்சிக்குள் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ரூ.700 மற்றும் ரூ.600. இதில் எது குறைவோ அது நகர ஈட்டுப்படியாக வழங்கப்படும். இதர பகுதிகளில் அடிப்படை ஊதியத்தில் 4 சதவீதம் அல்லது ரூ.600 மற்றும் ரூ.500 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு
பட்ஜெட் விலையில் Realme C83 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in