

புதுடெல்லி: புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த 3 மாநிலங்களிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறு கிறது.
புதுச்சேரி: புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக - அதிமுக - லஜக ஒரு அணியாக வும், காங்கிரஸ் - திமுக - விடுதலைச் சிறுத்தைகள் ஒரு அணியாகவும் மோதுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் 2 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுகின்றன.
தவெக கூட்டணி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. மாஹே, ஏனாம் தொகுதிகளில் போட்டியைத் தவிர்த்துள்ளது. இதைத் தாண்டி பிரதான கட்சிகளில் சீட் கிடைக்காத முக்கிய பிரமுகர்கள் சிலரும் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். புதுச்சேரி தேர்தல் களத்தில் மொத்தம் 117 சுயேச்சைகள் உட்பட 294 வேட்பாளர்கள் உள்ளனர்.
கேரளா: கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் மார்க்சிஸ்ட் 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 95, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதர தொகுதிகள் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
அசாம்: அசாமில் ஆளும் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அந்த மாநிலத்தில் 126 தொகுதிகள் உள்ளன. ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணியில் பாஜக 89 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 26, போடோலேண்ட் மக்கள் முன்னணி 11 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.காங்கிரஸ் தலைமையிலான அசாம் சோன்மிலிட்டோ மோர்ச்சோ கூட்டணியில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதன் கூட்டணி கட்சியான ராய்ஜோர் தல் 16, அசாம் ஜாதிய பரிஷத் 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. பாஜக, காங்கிரஸ் கூட்டணியை தவிர்த்து திரிணமூல் 23, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 21, ஆம் ஆத்மி 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.