

திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை மும்முனைப் போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இளமையான தொகுதி திருச்சுழி தொகுதி. கடந்த 2006-ல் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து திருச்சுழி தொகுதி தனியாக பிரிக்கப்பட்டது.
இத்தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் மழையை நம்பித்தான் உள்ளது. இத்தொகுதியில் முக்குலத்தோர், ரெட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.
திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி ஒன்றியங்களையும், குலசேகர நல்லூர், மாங்குளம், மேலகண்ட மங்கலம், குருணைக்குளம், ஆலடிப் பட்டி, பொம்மக்கோட்டை உள்ளிட்ட 40 வருவாய் கிராமங்கள் உள்ளன.
இத்தொகுதியில் மறுசீரமைப்புக்குப் பிறகு 1,00,645 ஆண் வாக்காளர்களும், 1,03,634 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 14 பேரும் என மொத்தம் 2,04,293 பேர் உள்ளனர்.
திருச்சுழி தனியாக பிரிக்கப்பட்டது முதல் 2011, 2016, 2021 ஆகிய 3 தேர்தல்களிலும் திமுகவின் தங்கம் தென்னரசுவே வெற்றி பெற்றுள்ளார்.
அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு இந்த முறை மீண்டும் திருச்சுழியில் போட்டியிடுகிறார். தந்தை தங்கப்பாண்டியன் காலத்திலிருந்து திருச்சுழி தொகுதிக்கு பரிட்சயமானவர் தங்கம் தென்னரசு. இவரது சகோதரி தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி.யாக உள்ளார்.
தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான சென்னம்பட்டி வலது கால்வாய் புனரமைப்பு, நிலையூர் கம்பிக்குடி கால்வாய்த் திட்டம் நிறைவேற்றம், வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டம், பல்வேறு திட்டங்களின்கீழ் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி, அரசு கலைக் கல்லூரி என பல்வேறு திட்டங்களை தங்கம் தென்னரசு நிறைவேற்றி உள்ளார்.
எதிரணியில் அதிமுக சார்பில் இந்த முறை முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் களமிறக்கப்பட்டுள்ளார். ராஜவர்மனுக்கு திருச்சுழி தொகுதி புதிது என்றாலும், கட்சிப் பணியில் பழக்கமான தொகுதி என்றே கூறலாம். சாத்தூர் தொகுதியில் கடந்த 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்த முறை சாத்தூர் தொகுதி கிடைத்திருந்தால் எளிதாக வெற்றிபெறுவார் என்று அதிமுகவினர் கூறி வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக திருச்சுழி வேட்பாளராக ராஜவர்மன் அறிவிக்கப்பட்டார். இத்தொகுதியில் தற்போது பல அணிகளாக பிரிந்திருந்த அதிமுகவினரை ஒருங்கிணைத்து பிரச்சாரத்துக்கு அனுப்பியுள்ளார்.
இது இவருக்கு பலமாக காணப்பட்டாலும், மண்ணின் மைந்தன் என்ற பெயர்பெற்ற தங்கம் தென்னரசுவுக்கு கடும் போட்டி இருக்கும் என்ற நிலையை உருவாக்கியுள்ளார். தேர்தல் வியூகம் வகுத்து கட்சியினரை களப்பணியில் ஈடுபடுத்துவதில் ராஜவர்மன் கைதேர்ந்தவர் என்ற பெயரும் உண்டு.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக் ராஜாவும், தவெக வேட்பாளர் சமயனும் போட்டியிடுகின்றனர்.
திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சீமான் பிரச்சாரத்துக்குப் பிறகு கார்த்திக் ராஜாவுக்கான ஆதரவு சற்று உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நம்பிக்கையில் கார்த்திக் ராஜாவும் களப் பணியாற்றி வருகிறார்.
மேலும், தவெக வேட்பாளர் சமயனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தொகுதி மக்களுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத நபர் என்றாலும் தவெக வேட்பாளர் என்ற முறையில் இளம் தலைமுறையினரிடையே தற்போது அறிமுகமாகி வருகிறார். இவரும், இத்தொகுதியில் கணிசமான வாக்குகளை பெறுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.