கள்ளக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவது யார்?

வளர்ச்சியைத் தாண்டி நிற்கும் பிரச்சினைகள்

விவசாயத் தொழிலை பிரதானமாகக் கொண்டது கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி. இப்பகுதியில் நெல், கரும்பு, மணிலா, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மரச் சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது, மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கிறது.

சுமார் 243 கிராமங்களை உள்ளடக்கியது கள்ளக்குறிச்சி தொகுதி. இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக பட்டியலினத்தவர்கள், அதற்கடுத்தபடியாக வன்னியர்கள், உடையார் மற்றும் கவுண்டர்கள் குறிப்பிடத்தக்க அளவு வசிக்கின்றனர்.

இத்தொகுதி 1952- ம் ஆண்டு உருவாக்கபபட்டது. 1962-ல் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. பின்னர் 1967-ல் கள்ளக்குறிச்சி பொது தொகுதியாக மாறியது. அதன்பின் 1977-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதி நீக்கப்பட்டு சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது.

தொகுதி மறுவரையக்குப் பின்னர் 2011 முதல் தனித்தொகுதியாக இருந்து வருகிறது. இத்தொகுதியில் சுயேச்சை இருமுறையும், திமுக, அதிமுக தலா 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மணிரத்னம், அதிமுக சார்பில் செந்தில்குமார் ஆகியோர் இடையே நேரடிப்போட்டி நிலவியதில் செந்தில்குமார் 25,871 வாக்குகள் வித்தியாசத்தில் மணிரத்தனத்தை தோற்கடித்தார்.

2026 தேர்தல் களமும் 2021 தேர்தல் களம் போலவே இத்தொகுதியில் தொடர்கிறது. திமுக கூட்டணியில் விசிக போராடிப் பெற்று இத்தொகுதியில் களமிறங்குகிறது. விசிக வேட்பாளராக தொல்.திருமாவளவனின் சகோதரி மகள் வழக்கறிஞர் கு.மாலதி களமிறங்கியிருக்கிறார்.

அதிமுக சார்பில் ராஜீவ்காந்தி, தவெக சார்பில் அருள் விக்னேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் நாகம்மாள் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இருப்பினும் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் மாலதிக்கும், அதிமுக வேட்பாளர் ராஜீவ்காந்திக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

மாவட்டச் செயலாளர் குமரகுருவின் சாய்ஸில் அதிமுக வேட்பாளரான ராஜீவ்காந்திக்கு சீட் வழங்கியதால், மாவட்டச் செயலாளருடன் முரண்பட்ட முன்னாள் எம்எல்ஏ அழகுவேல் பாபு, தற்போது திமுக பக்கம் தாவியுள்ளார். ‘இதற்கெல்லாம் நான் சோர்ந்து விட மாட்டேன்’ என்ற ரீதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ராஜீவ்காந்தி.

அதிமுக ஆட்சியில் உருவானது கள்ளக்குறிச்சி மாவட்டம். அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டு இத்தொகுதியில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, மாவட்ட எல்லையில் உள்ள சர்வதேச தரத்திலான கால்நடைப் பூங்கா உள்ளிட்டவற்றை தங்கள் கட்சியின் சாதனையாக அதிமுக எடுத்து வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

‘திமுக ஆட்சி அமைந்தவுடன் ஏற்பட்ட கனியாமூர் பள்ளிக் கலவர வழக்கு, கள்ளச்சாராய உயிரிழப்பால் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஏற்பட்ட இழுக்கு’ போன்றவற்றையும் மறக்காமல் சொல்லி ராஜீவ்காந்தி வாக்கு சேகரித்து வருகிறார்.

“இந்தத் தொகுதியில் அதிமுகவோடு நேரடியாக மோத திமுக தயங்கி வருகிறது. அதனால்தான் கடந்த முறை காங்கிரஸூக்கும், இந்த முறை விசிகவுக்கும் ஒதுக்கியிருக்கிறது. இதுவே எங்களுக்கு வெற்றி; இம்முறையும் எங்களுக்குத் தான் வெற்றி” என்று மார்தட்டுகின்றனர் அதிமுகவினர்.

அதேநேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள விசிக வேட்பாளரான கு.மாலதியோ, “அதிமுக ஆட்சியில் மாவட்டம் உருவாக்கப்பட்டாலும், ஆட்சியர் அலுவலகத்தை முழுமையாக கட்டி முடித்து மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளது திமுக அரசு.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் வன உரிமைச் சான்று, மலையில் சாலை வசதிகள், மொபைல் ஆம்புலன்ஸ் போன்ற அடிப்படை வசதி செய்து கொடுத்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம், கள்ளக்குறிச்சி நகருக்கு பாதாள சாக்கடைத் திட்ட அறிவிப்பு” போன்றவைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். இத்தொகுதியில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாகவும் தனது பரப்புரையில் குறிப்பிடுகிறார்.

“விசிக வேட்பாளர் மாலதியை, எப்பாடுபட்டாவது வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று திமுக மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திக்கேயன் தனது கட்சியினருக்கு கடுமையாக உத்தரவிட்டிருக்கிறார். வசந்தம்கார்த்திகேயனே போட்டியிடுவது போல வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்கின்றனர் திமுகவினர்.

தங்கள் தலைவரின் சகோதரி மகள் என்பதால் விசிகவினர் கூடுதல் அக்கறை காட்டி வருவதை தொகுதியில் காண முடிகிறது. தவெக வேட்பாளரான அருள் விக்னேஷ் தனது பிரச்சாரத்தில் கனியாமூர் பள்ளி கலவர வழக்கையும், இதனால் பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறியும் எடுத்துக் கூறுகிறார்.

இரு கட்சிகளால் கள்ளக்குறிச்சி தொகுதி எந்த வளர்ச்சியையும் பெறவில்லை என்று கூறி வாக்கு சேகரிக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரான நாகம்மாள் சீமானின் வீர வசனங்களை சுட்டிக் காட்டி வாக்கு சேகரிக்கிறார். விவசாயத்தை மேம்படுத்த நாம் தமிழர் கட்சி வகுத்துள்ள விவசாயத் திட்டங்களை இத்தொகுதியில் செயல்படுத்துவோம் என்று தெரிவிக்கிறார்.

தொகுதி பிரச்சினைகள்

கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்க கொண்டு புதிய மாவட்டமாக உருவெடுத்த போதிலும், கோமுகி ஆற்றில் கொட்டப்படும் கள்ளக்குறிச்சி நகர குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு, நகரின் முகப்பில் எரியூட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுதல், 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் கள்ளக்குறிச்சி ரயில் நிலையப் பணி, விவசாய பூமியானாலும் குடிநீருக்கு நிலவும் கடும் தட்டுப்பாடு, அறிவிப்போடு நிற்கும் கள்ளக்குறிச்சி சுற்றுவட்டச் சாலைப் பணி, கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்ளால் நகருக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல், கள்ளக்குறிச்சி நகரில் இருந்து 8 கி.மீ தொலைவில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் அலைக்கழிப்பு என இந்தத் தொகுதியிலும் பிரச்சினைகள் கைகட்டி நிற்கின்றன.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண்கள் - 1,37,649

  • பெண்கள் - 1,41,044

  • மூன்றாம் பாலினத்தவர் - 69

  • மொத்தம் - 2,78,762

கள்ளக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவது யார்?
தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in