

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் ‘இதயம் கவர்ந்த எம்ஜிஆர்’ என்ற நூலை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட பாடலாசிரியரும் முன்னாள் அரசவைக் கவிஞருமான முத்துலிங்கம் பெற்றுக் கொண்டார். அருகில், விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன். |
வேலூர்: ‘தமிழகத்தில் உயர் கல்வியை வளர்த்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்’ என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் எம்ஜிஆர் நினைவு சொற்பொழிவு நேற்று நடை பெற்றது.
இதற்குத் தலைமை தாங்கி விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது: உலகில் இரண்டு அதிசயங்களை நிகழ்த்தியவர் எம்ஜிஆர். ஒன்று நடிகராக இருந்து அரசியல் தலைவராகி, முதல்வர் ஆனது. இரண்டாவது வெளி நாட்டு மருத்துவமனையில் படுத்துக் கொண்டே, உள்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது.
1980-ல் என்னை அணைக்கட்டு தொகுதியில் வேட்பாளராக நிற்க வைத்தவர் எம்ஜிஆர்தான். அந்த காலகட்டத்தில் வட மாவட்டங்களில் ஒரு அரசு பொறி யியல் கல்லூரிகூட இல்லாத நிலையில் அதைத் தொடங்க வேண்டும் என எம்ஜிஆரிடம் கேட்கச் சென்றேன்.
‘நீங்களே கல்லூரி ஆரம்பியுங்கள்’ என எம்ஜிஆர் கூறியதால் 1984-ல் 180 மாணவர்களுடன் தொடங்கிய விஐடியில் இன்று 4 வளாகங்களில் ஒரு லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழகத்தில் பள்ளிக் கல்வியை வளர்த்தவர் காமராஜர் என்றால் உயர்கல்வியை வளர்த்தவர் எம்ஜிஆர்தான்.
தமிழகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. மிகவும் பழமையான சென்னை பல்கலைக்கு. கடந்த 3 ஆண்டுகளாக துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலை தமிழர்களையும், தமிழகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
தமிழக அரசு - ஆளுநர் பிரச்சினை மத்திய, மாநில அரசுகள் தங்களது பிரச்சினைகளை தள்ளிவைத்து கல்வியில் மட்டுமாவது ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வுகாண வேண்டும். அரசுக்கும், ஆளுநருக்குமான பிரச்சினை மக்களையும், மாணவர்களை யும் பாதிக்கக்கூடாது என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
அரசு நிர்வாகத்தில் தொடர்பு இல்லாத தலையீட்டை, குறுக்கீட்டை எப்போதும் விரும்ப மாட்டேன் என நாளி தழில் விளம்பரம் கொடுத்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். அவர் பெரியார் கொள்கைகளைப் பேசியது இல்லை. ஆனால், அவரது கொள்கைகளை நிறைவேற்றிக் காட்டினார்.
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நிறைவேற்றி யவர் எம்ஜிஆர்தான். எம்ஜி ஆரை ‘இதயக்கனி’ என கூறியவர் அண்ணா. 1986-ல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்று சட்டப்பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றியவர் எம்ஜிஆர். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, விழா நோக்க வுரையில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசும்போது, ‘‘வரலாற்றைப் படைக்க, படைக்கப்பட்ட ஒரே தலைவர் எம்ஜிஆர். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொகுத்துள்ள உலகின் சிறந்த 140 நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர்தான்.
அந்த காலத்திலேயே டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்தவர் எம்ஜிஆர்தான். அவருடைய பாடலை ரசிக்காதவர்கள் யாரும் கிடையாது. கடந்த வாரம் ஒரு பேட்டியில்கூட முதல்வர் தனதுகாரில் எம்ஜிஆரின் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற பாடல்தான் ஒலிக்கும் என்று கூறியுள்ளார்.
எம்ஜிஆர் பெயரைச் சொல்லாமல் தமிழ்நாடு வரலாறு இல்லை. நேற்று வந்தவர்கள் கூட எம்ஜிஆர் பெயரைச் சொன் னால்தான் வாக்கு கிடைக்கும் நிலை உள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில், ‘இதயம் கவர்ந்த எம்ஜிஆர்’ என்ற நூலை வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட, பாடலாசிரியர் முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார்.
எம்ஜி ஆரின் குடும்பத்தினர் கவுரவிக் கப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் பாண்டுரங்கன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மோகன், கே.சி.வீரமணி. எஸ்.ராமச் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.