“நாட்டின் எந்த மாநிலத்திலும் இதுவரை கல்வியை இலவசமாக வழங்கும் அரசு அமையவில்லை” - விஐடி வேந்தர் கருத்து

“நாட்டின் எந்த மாநிலத்திலும் இதுவரை கல்வியை இலவசமாக வழங்கும் அரசு அமையவில்லை” - விஐடி வேந்தர் கருத்து

படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
2 min read

சென்னை: நாட்டின் எந்த மாநிலத்திலும் கல்வியை இலவசமாக வழங்கும் அரசு இதுவரை அமையவில்லை என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.

பேராசிரியர் வேதகிரி சண்முக சுந்தரம் நூற்றாண்டு விழா சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கிப் பேசியதாவது: ஒரு நாடு வளர வேண்டும் என்றால் ஜிடிபி, தனிநபர் வருமானம் வளர்ச்சியடைய வேண்டும். உலக அளவில் ஜிடிபியில் 6-வது இடத்தில் உள்ள இந்தியா, தனிநபர் வருமானத்தில் 177-வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஏற்றத்தாழ்வு.

சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆங்கிலேயர்கள் 1931-ம் ஆண்டு கைவிட்டனர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதால், மீண்டும் சாதிக் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் 46 லட்சம் சாதிகள் உள்ளன. சமூக நீதி தேவையான ஒன்று. ஆனால் அது மக்களுக்கான உண்மையான சமூக நீதியாக இருக்க வேண்டும். வேட்டி, சேலை, மிதிவண்டி, கிரைண்டர், மிக்சி, லேப்டாப், பேருந்து பாஸ் என எல்லாவற்றையும் இலவசமாகத் தரும் மத்திய, மாநில அரசுகள் கல்வியை இலவசமாகத் தர முடியவில்லை.

கல்வியை இலவசமாக வழங்கும் அரசு நாட்டின் எந்த மாநிலத்திலும் இதுவரை அமையவில்லை. எங்களது கல்வி நிறுவனம் ‘விஐடி ஸ்டார்ஸ் திட்டம்’ மூலம் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழுமையான இலவச உயர்கல்வி வழங்கும் சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எல்லோருக்கும் கல்வி கிடைக்கச் செய்தால்தான் பேராசிரியர் சண்முகசுந்தரம் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழா மலரை ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் வெளியிட, ஜெயா கல்வி அறக்கட்டளைத் தலைவர் கனகராஜ் பெற்றுக்கொண்டார். விழாவில் பங்கேற்ற பேராசிரியர் வேதகிரி சண்முகசுந்தரம் - யசோதா சண்முகசுந்தரம் தம்பதிக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர்.

அவர்கள் பேசியதாவது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ‘மூலதனம்’ புத்தகம் எழுத காரல் மார்க்ஸுக்கு அவரது மனைவி ஜென்னி துணையாக இருந்ததுபோல, பேராசிரியர் வேதகிரி சண்முக சுந்தரத்துக்கு அவரது மனைவி யசோதா துணையாக உள்ளார். அதனால்தான் அவரால் பல சாதனைகள் படைக்க முடிந்தது. தமிழ்நாடு பொருளாதார மன்றத் தலைவர், இந்தியப் பொருளாதார மன்ற உறுப்பினர், ரிசர்வ் வங்கி ஆலோசனைக் குழு உறுப்பினர் என பல பதவிகளை வகித்து பல சாதனைகள் படைத்துள்ளார்.

தி.க தலைவர் கி.வீரமணி: நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பது இவர்களுக்குதான் பொருந்தும். ஏனென்றால், தம்பதியர் இருவரும் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர்கள். இவ்வாறு அவர்கள் பேசினர்.

விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் வாழ்த்திப் பேசினர்.

“நாட்டின் எந்த மாநிலத்திலும் இதுவரை கல்வியை இலவசமாக வழங்கும் அரசு அமையவில்லை” - விஐடி வேந்தர் கருத்து
விநாயகர் சிலைகளை கரைக்க பட்டினப்பாக்கம், நீலாங்கரையில் அடுத்த ஆண்டு முதல் அனுமதி இல்லை: அரசு விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in