

கடலூர்/ஓசூர்: கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோயில் தோப்பு உள்ளது. இந்தத் தோப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் (Fruit Bats) தங்கியுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இதைக்காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் இருந்த இந்த வவ்வால்கள் நாளடைவில் குறைந்து கொண்டே வந்ததால், கிராம மக்கள் ஒன்று கூடி இவைகளை பாதுகாக்க முடிவெடுத்தனர். இயற்கை ஆர்வலர்களின் ஆலோசனைப்படி, அன்று முதல் பட்டாசு வெடிப்பதை இக்கிராமத்தில் முற்றிலுமாக நிறுத்தி விட்டனர்.
மேலும், அங்கிருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களில் சில அழிந்த நிலையில், புதிதாக இலுப்பை, வேம்பு, புளியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை கடந்த பத்தாண்டுகளில் வளர்த்து தோப்பாக மாற்றியுள்ளனர்.
இரவில் கல்வராயன் மலை பகுதிக்கு இரை தேடி சென்றுவிட்டு, காலையில் வந்து தங்கும் வவ்வால்களை கிராம மக்கள் யாரும் துன்புறுத்துவது இல்லை. தொடக்கத்தில் வவ்வால்களை வேட்டையாடி வந்த கும்பலைக் கூட, கிராம பொதுமக்கள் விரட்டி அடித்து விட்டனர். இந்த பழந்தின்னி வவ்வால்களை தங்களின் வளத்தைப் பெருக்கும் பாதுகாவலர்களாக நினைக்கின்றனர் அடரி கிராம மக்கள்.
இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிலம்பரசன் கூறுகையில், “பறக்கக்கூடிய தன்மையை பெற்ற, ஒரே பாலூட்டி இனம் வவ்வால். இது கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருவதாக ஆராய்ச்சி வல்லுநர்கள் கூறுகின்றனர். இவற்றை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்களின் உதவியுடன் நாங்கள் முயற்சித்து, அதில் பயனும் அடைந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை எங்கள் கிராம எல்லையில் தடைசெய்து அதைக் கடுமையாக பின்பற்றி வருகிறோம். இதனால் பழையபடி பழந்தின்னி வவ்வால்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது” என்கிறார்.
“வவ்வால்கள் குடியிருக்கும் தோப்பின் வழியாக இறுதி ஊர்வலம் சென்றால் கூட, தோப்பின் அருகே செல்லும் போது தாரை, தப்பட்டைகளை கூட அடிக்காமல் அமைதியாகவே கடந்து செல்கிறோம்.
அரிய வகை அழிந்து வரும் பாலூட்டி இனமான பழந்தின்னி வவ்வால்களை காப்பதில், எங்களது சுயநலமும் உண்டு. இவற்றால் கிராமம் விருத்தியாகும் என்ற நம்பிக்கையைத் தாண்டி, இவறறின் எச்சங்கள் விளை நிலங்களில் விழ, மண் வளம் அதிகரிக்கிறது” என்றும் அடரி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோல திட்டக்குடி வட்டம், கொரக்கை கிராமத்தில் உள்ள சாந்தப்ப அய்யனார் கோயில் அருகில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியன்மரத்தில், அரிய வகை பழந்தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. கிராமத்திலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ள அப்பகுதியிலும் பட்டாசு வெடித்தல், ஒலி எழுப்பும் செயல்களை கடந்த சில ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர்.
இதே போல், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள கழுப்பெரும்பாக்கம் கிராமத்திலும், நூற்றாண்டு பழமையான பெரிய மரம் ஒன்றில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராம மக்கள், இந்த வவ்வால்களுக்காக, பட்டாசு வெடிப்பதே கிடையாது. இதை ஒரு கிராம கட்டுப்பாடாகவே வைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் ரமேசு கருப்பையா கூறுகையில், “காடுகள் அழிக்கப்படுவதாலும், பருவநிலை மாறுவதாலும் வவ்வால்கள், குறிப்பாக பழந்தின்னி வவ்வால்கள் வேகமாக அழிந்து இயற்கை சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இவைகளைப் பாதுகாக்க, அவைகளின் வாழிட கிராமங்களில் அத்திமரம், நாவல் போன்ற பழ மரங்களை வளர்க்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கிராமங்களை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, அந்த கிராமங்களை அங்கீகரித்து விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் கவுதாசபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் ஏரிக்கரையில் இருந்த பழமையான மாமரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றன. அவற்றை காவல் தெய்வமாகக் கருதும் கிராம மக்கள், வவ்வால்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக தீபாவளியின்போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதில்லை.
மத்தாப்பு, சங்குச்சக்கரம் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், வவ்வால்கள் வசித்த மாமரங்கள் காய்ந்து விழுந்ததால், அவை கோணப்புளிய மரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன. எனவே, ஏரிக்கரையில் மீண்டும் மரங்களை நட்டு வவ்வால்களுக்கு நிரந்தர இருப்பிடம் ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.