

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. படம்: பிடிஐ
ஸ்ரீஹரிகோட்டா: அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சாதனை படைத்தது.
இந்தியாவில் ‘இஸ்ரோ’ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) மூலமாக செயற்கைக் கோள்களை ஏவுதல், சந்திரயான் போன்ற பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பையும் அனுமதிக்கும் உத்தரவை பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பித்தார்.
இதையடுத்து, 2022 நவ.18-ம் தேதி ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம் ‘விக்ரம்-எஸ்’ என்ற சப்-ஆர்பிட்டல் வகை சிறிய ராக்கெட்டை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் தனது முதல் ஆர்பிட்டல் வகை ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான திட்டத்தை வடிவமைத்தது. அதன்படி, ‘விக்ரம்-1’ ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. 22 மீட்டர் உயரம், 1.7 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ராக்கெட்டில் முதல்முறையாக உள்நாட்டிலேயே முப்பரிமாண (3டி) பிரின்டிங் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இன்ஜின், அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் பூஸ்டர்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததை தொடர்ந்து, இன்-ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோவின் ஒருங்கிணைப்புடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 11.30 மணிக்கு ‘விக்ரம்-1’ ராக்கெட், விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பயணத்துக்கு ‘மிஷன் ஆகமன்’ என பெயரிடப்பட்டிருந்தது.
நேற்று ஏவுதலுக்காக ராக்கெட் தயாராக இருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், கவுன்ட்-டவுன் நேரத்தை தாண்டி கூடுதலாக 35 நிமிடங்கள் ராக்கெட் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு, 12.05 மணிக்கு ‘விக்ரம்-1’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிவேகமாக விண்ணில் பயணித்த ராக்கெட் அடுத்தடுத்த நிலைகளை துல்லியமாக கடந்து, 450 கி.மீ. தொலைவில் உள்ளதிட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையை 16 நிமிடங்களில் அடைந்தது.
இதையடுத்து, இத்திட்டம் வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதன்மூலம் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து புவி சுற்றுவட்டப் பாதையில் தனியார் ஆர்பிட்டல் ஏவுதிறன் கொண்ட உலகின் 3-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினரை பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். பின்னர், காணொலி வாயிலாக மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசும்போது, ‘‘விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கும் பிரதமர் அனுமதி வழங்கியதால், இந்த வரலாற்றுத் தருணத்தை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விண்வெளித் துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 400-க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் 9 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கியுள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 45 பில்லியன் டாலராக உயரும்’’ என்றார்.
இந்த பயணத்தில் ‘விக்ரம்-1’ ராக்கெட்டுடன், விண்வெளிக் கழிவுகளை அகற்றும் ரோபோடிக் கைகள் கொண்ட காஸ்மோசர்வ் ஸ்பேஸ் நிறுவனத்தின் ‘எம்பிரேஸ்’ கருவி, ஜெர்மனியின் விண்வெளி சோதனை கருவிகள், எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிப்பதற்காக ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் உருவாக்கிய ‘ஸ்கோப்’ செயற்கைக் கோள், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் புதிய தொழில்நுட்ப திறன்களை சோதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘கிரஹா ஸ்பேஸ்’ நிறுவனத்தின் சிறிய செயற்கைக் கோள் ஆகியவையும் அனுப்பப்பட்டுள்ளன.
ராக்கெட்டில் கலாம் சிற்பம்: காஸ்மோஸ் டைமண்ட்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை வைரமும், 18 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட சிறிய ராக்கெட்டில், இந்திய விண்வெளித் திட்டத்தின் முன்னோடிகளான டாக்டர் விக்ரம் சாராபாய், சர் சி.வி.ராமன், அப்துல்கலாம் ஆகியோரின் நுண்ணிய சிற்பங்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இத்துடன் பிரதமர் மோடி ‘வந்தே மாதரம்’ என எழுதிய வாழ்த்து அட்டையும் அதில் உள்ளது.
செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறும்போது, ‘‘விண்வெளி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் ராக்கெட், அதன் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்கைரூட் நிறுவனத்துக்கு வாழ்த்துகள்.
இது ஒரு தொடக்கம் மட்டுமே. இந்த நிதி ஆண்டில் 6 முதல் 7 ராக்கெட்களை விண்ணில் செலுத்ததிட்டமிட்டுள்ளோம். குலசேகரபட்டினம் ஏவுதளம் அமைக்கும் பணிகள் 2027 மார்ச்சில் நிறைவடையும்’’ என்றார்.
இந்த நிகழ்வில் ஆந்திர மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் குமார் கோயங்கா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநர் முத்துசெழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.