

பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: “இப்போது அமைச்சர் பதவிக்கு எல்லோரும் ஓடுகிறார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய்யே வீடு தேடிவந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, “இந்த தேர்தலில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் விரும்பிய கூட்டணியை அமைத்தோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல், ஒரு மாயையை உருவாக்கி ஒரு சுனாமி போல அமைந்தது. தேர்தலில் வெற்றி தோல்விகள் சகஜம், மாற்றம் ஒன்றே மாறாதது.
மக்களும், இளைஞர்களும் இந்தத் தேர்தலில் ஒரு முடிவை எடுத்தனர். இன்று அன்றாடம் நடக்கும் பல விஷயங்கள் தமிழக மக்கள், பெண்கள், இளைஞர்களை சிந்திக்க வைத்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களை பட்டியலிட்டால் ஒரு நாள் போதாது. தவெக ஆட்சிக்கு வந்த வெகு சிறிய காலத்திலேயே தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதற்கான தீர்வை தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
நாம் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். இன்று இந்தக் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை பெற்றே ஆட்சி நடக்கிறது. யாரை தீய சக்தி எனச் சொன்னார்களோ, அந்த ‘தீய சக்தியின்’ ஆதரவோடு தான் ‘தூய சக்தி’ எனச் சொன்னவர்கள் ஆட்சியமைத்துள்ளனர். இதனையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.
என்னவெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்து தவெக ஆட்சிக்கு வந்தது என்பது மக்களுக்கு தெரியும். ஒரு புதிய கட்சியின் ஆட்சிக்கு 6 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இன்று மக்கள் பெரிய அளவில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதே கள நிலவரம். பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், மேகேதாட்டு விவகாரம், மின்வெட்டு, விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக போராட்டங்கள் இன்று மாநிலம் முழுவதும் நடக்கிறது.
தேமுதிக என்றால் பேரம், பேரம் என்றார்கள். எந்த பேரத்துக்கும், எந்த பதவிக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக தான். வேறு குற்றம் சொல்ல முடியாததால், பேரம் பேரம் என ஒரு புனிதமான கட்சியை களங்கப்படுத்தினார்கள். பதவிக்கோ, பணத்துக்கோ, சோஃபா செட்டுக்கோ ஆசைப்படாமல், நாம் பயணிக்கும் கூட்டணிக்கு விசுவாசமாக, தர்மத்தோடு உண்மையாக இருக்கிறோம்.
நான் நினைத்திருந்தால், விஜய்யை சந்திக்க என்னால் முடியாதா?. அமைச்சர் பதவிக்கு எல்லோரும் ஓடுகிறார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய்யே வீடு தேடிவந்து எனக்கு துணை முதல்வர் பதவியே கொடுத்திருப்பார். இதுதான் உண்மை. ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சியில்லை தேமுதிக. என்றும் கொண்ட கொள்கைக்கும், கூட்டணி தர்மத்துக்கும் உண்மையாக இருக்கும் கட்சி தேமுதிக.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு யார் துணை நின்றார்கள். அன்று எல்லோரும் உங்களை விட்டு ஓடியபோது, உங்களை மதித்து நின்ற ஒரே கட்சி தேமுதிகதான். ஏன் அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய எங்களுக்கு தெரியாதா?.
2024-ல் எடப்பாடி பழனிசாமியை விட்டு ஓடியவர்களை எல்லாம், 2026 தேர்தலுக்காக அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆனால், 2024-ல் உறுதுணையாக நின்ற எங்களை மதித்து அழைத்துப் பேசினாரா?. கூட்டணியை வலுப்படுத்த ஒருங்கிணைந்து போராட்டங்களை, மாநாடுகளை நடத்த வேண்டும் என பழனிசாமியிடம் பல முறை வேண்டுகோள் விடுத்தேன். அதனை அவர் கடைசிவரை கேட்கவே இல்லை.
நாங்கள் ஏதோ எம்.பி சீட்டுக்காக கூட்டணி மாறியதாக சொல்லலாம். ஆனால், அதிமுக கூறிய வார்த்தையை காப்பாற்றாமல், எங்களை மதிக்காத காரணத்தால் கூட்டணியை விட்டு வெளியேறினோம். பிரச்சாரத்தில் அரை சதவீத கட்சி, ஐசியுவில் உள்ள கட்சி என எங்களை பழனிசாமி விமர்சித்தார். ஆனால், இன்று அதே நிலை அந்தக் கட்சிக்கே வந்துவிட்டது. தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறக்கூடாது என அதிமுகவினர் அனைவரும் நினைத்தனர். நம்மை பழனிசாமி குறைத்து மதிப்பிட்டார். அதன் விளைவாக 15 ஆண்டுகளாக பழனிசாமி இருந்த அரசு இல்லத்தை கூட காலி செய்யும் நிலை வந்துவிட்டது. இன்று அதிமுக ஐசியுவுக்கு சென்றுவிட்டது.
2011-ல் 29 இடங்களில் வென்ற பிறகு சட்டப்பேரவையில் விஜயகாந்த் மக்களுக்காக பேசினார். அதனை தனிப்பட்ட வெறுப்பாக மாற்றி நம் எம்எல்ஏக்களை விலைபேசி அதிமுகவுக்கு கொண்டு சென்றனர். அன்று தேமுதிகவுக்கு அதிமுகவால் நடந்த கொடுமை, இன்று தவெக மூலமாக அதிமுகவுக்கு வந்துள்ளது. இப்போது கூட அதிமுகவில் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகின்றன. அரசியலில் அங்கும், இங்கும் என தாவுபவர்களுக்கு எதிர்காலம் கிடையாது” என்று தெரிவித்தார்.