“மக்கள் சக்தியால் முதல்வர் அரியணையில் விஜய் அமர்வார்” - கோவையில் செங்கோட்டையன் உற்சாகம்

படம்: ஜெ.மனோகரன்

படம்: ஜெ.மனோகரன்

Updated on
2 min read

கோவை: “தவெகவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. எந்த தடை இருந்தாலும், மக்கள் சக்தி மூலமாக, 2026-ல் விஜய் முதல்வராக அரியணையில் அமர்வார்” என தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு, தவெக உயர்மட்ட மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தவெகவில் இணைந்தபின், சென்னையில் இருந்து கோவை வந்த செங்கோட்டையனுக்கு, தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியது: “அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்து இருந்தபோது, நான் ஜெயலலிதாவின் அணியில் இருந்தேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நாளைய முதல்வருமான விஜய் உடன் இப்போது இருக்கிறேன்.

திராவிட இயக்கத்தை மீண்டும் தமிழகத்தில் உருவாக்க, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், மக்கள் சக்தியோடு எங்கள் பணிகள் அமையும். மக்கள் முழு மனதாக அவரை ஏற்றுக் கொள்வார்கள். மக்கள் சக்தியை வீழ்த்துவதற்கு, எந்த சக்தியாலும் முடியாது. தவெகவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. எந்த தடை இருந்தாலும், மக்கள் சக்தி மூலமாக, 2026-ல் விஜய் முதல்வராக அரியணையில் அமர்வார்.

<div class="paragraphs"><p>படம்: ஜெ.மனோகரன்</p></div>
சட்டப் போராட்டத்தில் வென்று மருத்துவரான 3 அடி உயர கணேஷ்!

தமிழகத்தில் ஒரு மாற்றத்தை, புதிய சமுதாயத்தை உருவாக்க, ஒரு நேர்மையான ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க விஜய் புறப்பட்டு இருக்கிறார். அவரது வெற்றிப் பயணம், மக்களுக்கு சேவை செய்வதாக இருக்கும். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை தூக்கி எறிந்து விட்டு மக்கள் சேவைக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு புனித ஆட்சியை கொண்டுவர இந்த இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நான் இடம்பெற்று இருக்கிறேன். என் உயிர் மூச்சு உள்ளவரை இவர்களுடன் இருப்பேன். எம்ஜிஆர் ஆட்சியில் அமர்ந்தபோது, ‘அண்ணாயிசம்’ எனது கொள்கை என அறிவித்தார். அதுபோல, அனைவரின் பொருளாதாரமும் உயர வேண்டும் என்ற நோக்கில், எல்லோருக்கும் வீடு, இரு சக்கர வாகனம் வேண்டும் என விஜய் அறிவித்து உள்ளார்.

தவெகவில் ஜனநாயகம் இருப்பதால், யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். தவெக தலைவர் விஜய் வாகனத்தில் ஒருபுறம் எம்ஜிஆர் படமும், மறுபுறம் அண்ணா படமும் இருப்பதை மறந்து விடக்கூடாது.

என்னை பொருத்தவரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். மூன்று முறை வாக்கே கேட்காமல் என்னை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கின்றனர். எனக்கு பின்னால் மக்கள் இல்லை என்று சொல்வது சரியல்ல. அதை மக்களே பார்த்துக் கொள்வார்கள். நான் என்று ஒருவர் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டுவான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக கோபிக்கு புறப்பட்டுச் சென்றார்.

<div class="paragraphs"><p>படம்: ஜெ.மனோகரன்</p></div>
விஜய் உடன் கைகோக்கும் செங்கோட்டையன் - தவெக பலம் கூடுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in