

அதிமுகவில் இருந்து விலகிய மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரத்திலேயே, விஜய்யை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. செங்கோட்டையன் இணைவதால் தவெகவின் பலம் கூடுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இப்போது உள்ள மிக மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவர் செங்கோட்டையன். திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் 1971 முதல் இதுவரை 10-வது முறையாக எம்எல்ஏவாக பதவி வகிக்கும் மூத்த அரசியல் தலைவர்களில் முதன்மையானவராக இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக 1977 முதல் தற்போது வரை அதிமுகவில் 9 முறையாக எம்எல்ஏவாக இருந்த பெருமையை பெற்றுள்ளார் செங்கோட்டையன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் அதிமுகவின் முக்கியத் தலைவராக இருந்த செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாகவே அக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டினார் இபிஎஸ். இதனைத் தொடர்ந்து இன்று காலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், மாலையில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேசியுள்ளார். இதன் காரணமாக செங்கோட்டையன் தவெகவில் இணைவது உறுதியாகிவிட்டது.
செங்கோட்டையன் வருகை தவெகவுக்கு பலமா?
‘செங்கோட்டையனின் வருகை தவெகவுக்கு நிச்சயமாக கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது உண்மை. ஏனென்றால், விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பல மாற்றுக் கட்சியினர் தேமுதிகவில் இணைந்தனர். கமல்ஹாசன் கட்சி தொடங்கியபோதுகூட பல முன்னாள் அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் அவரின் கட்சியில் இணைந்தனர். ஆனால், விஜய் கட்சி ஆரம்பித்து இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எந்த மாற்றுக் கட்சியினரோ, திரைப் பிரபலமோ, முன்னாள் அரசு அதிகாரிகளோ தவெகவில் இணையவில்லை. அந்தக் குறையை ஒருவழியாக போக்கியுள்ளார் செங்கோட்டையன். எனவே, இது உறுதியாக தவெகவுக்கு பலமாக மாறியுள்ளது’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
குறிப்பாக, ‘செங்கோட்டையன் கொங்கு மண்டலத்தில் நன்கு அறிமுகமான நபர். அதுமட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் முழு ‘மேப்’பும் அவருக்கு அத்துப்படி. அதுபோல கொங்கு மண்டலத்தின் நாடித்துடிப்பு என்ன? பிரச்சினைகள் என்ன என்பதெல்லாம் அவருக்கு முற்று முழுதாக தெரியும். எனவே, செங்கோட்டையனின் அனுபவத்தை பயன்படுத்தி கொங்கு மண்டலத்தில் வலுவாக கால் பதிக்க தவெக முயற்சி செய்யும்.
மேலும், எம்ஜிஆரின் அரசியலை கூடவே இருந்து பார்த்தவர் செங்கோட்டையன். எனவே, எம்ஜிஆர் அடிக்கடி டீகோட் செய்து பேசும் விஜய்க்கு அவரின் அனுபவம் கைகொடுக்கலாம். ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டங்களை சிறப்பாக மேலாண்மை செய்த வியூகவாதியாக செங்கோட்டையன் இருந்தார். கரூர் கூட்டநெரிசல் போன்ற நெருக்கடியான சூழலில் இருக்கும் விஜய்க்கு, சீனியரான செங்கோட்டையனின் வியூகங்கள் நல்ல வழியை காட்டும். ஆனால், இதற்கு புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் வழிவிடுவார்களா என்பதே கேள்விக்குறி’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இதனையெல்லாம் தாண்டி, செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம், அக்கட்சியில் ஒருங்கிணைப்பை விரும்பும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. எனவே, இபிஎஸ் தலைமை மீது அதிருப்தி கொண்ட அதிமுகவின் சில நிர்வாகிகள், தொண்டர்கள் செங்கோட்டையனை பின்பற்றி தவெகவில் இணையலாம். இதற்கான தொடக்கப்புள்ளியாக மாறியிருக்கிறார் செங்கோட்டையன்.
மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனுக்கு அரை நூற்றாண்டு கால அனுபவம் உள்ளது. முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் தவெகவுக்கு அவரின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். அதேபோல, தமிழகத்தில் உள்ள பல கட்சி தலைவர்களுடனும் செங்கோட்டையனுக்கு நல்ல நட்பு உண்டு. எனவே தவெக ஒரு சிறப்பான கூட்டணியை அமைக்கவும் அவர் ஒரு பாலமாக செயல்படலாம். ஆனாலும், செங்கோட்டையன் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதியை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களை கொண்ட விஜய் சரியாக கையாளுவாரா என்பதும் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
செங்கோட்டையனால் தவெகவுக்கு பலம் கூடும் என்பதை அதிமுகவின் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர். ‘கோபிசெட்டிப்பாளையத்தை தாண்டி அவருக்கு ஈரோடில் கூட பெரிய செல்வாக்கு கிடையாது. எங்கள் கட்சியிலேயே எம்ஜிஆர் காலத்து தலைவர் என்பதால் அவருக்கு உயர்ந்த பதவிகளை வழங்கினர். மற்றபடி அவரால் கொங்கு மண்டல அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது. அவரால் இப்போதுள்ள சூழலில் கோபியில்கூட வெல்ல முடியாது’ என்கின்றனர்.
எப்படி பார்த்தாலும் செங்கோட்டையனின் வருகை என்பது தவெகவுக்கு எதோ ஒரு வகையில் லாபம்தான். ஆனால் அதனை விஜய் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்று பார்ப்போம்.