

சென்னை: திமுக அல்லது அதிமுக தான் வெற்றி பெறும் என்று வெளியான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் கருத்துக் கணிப்புகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை தொலைக்காட்சிகள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வெளியிடுகிறது.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், முந்தைய கணிப்புகள் பொய்த்து போனாலும், பிந்தைய கணிப்புகள் ஓரளவு துல்லியமான முடிவுகளை வழங்கியுள்ளன.
தமிழகத்தில், தற்போது நடந்த 2026 தேர்தலிலும் கருத்துக் கணிப்புகள் வெளியாகின. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கணிப்புகளில் பெரும்பாலான நிறுவனங்கள் திமுகவே ஆட்சி அமைக்கும் எனவும், சில நிறுவனங்கள் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் கணிப்புகளை வெளியிட்டன.
அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் விஜய்யின் தவெக கட்சி மிகக்குறைந்த இடங்களை பெற்று தோல்வி அடையும் என தெரிவித்திருந்தன. காமாக்யா நிறுவனம் தவெக 65 முதல் 80 இடங்களை பெறும் எனவும், தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் கணிப்பை வெளியிட்டது.
இந்தியா டுடே (ஆக்சிஸ் மை இந்தியா) மட்டுமே தவெக 98 முதல் 120 இடங்களை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று தனது கணிப்பை தெரிவித்தது.
விஜய் அவ்வளவு இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இல்லாத நிலையில், தவறான கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தை பலர் விமர்சனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து ஓய்வுபெற்ற காவல்துறை டிஜிபி ரவி, தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை வைத்து நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டார்.
அதில், தவெக 41 சதவீத வாக்குகளை பெறும் எனவும், 121 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால், தவெகவினர் உற்சகமடைந்தனர்.
அதேநேரம், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் அதிர்ச்சி அடைய செய்தன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது.
100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெற்றது. திமுக அல்லது அதிமுக தான் வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், தனித்து களம் கண்ட விஜய், அந்த கருத்துகணிப்புகளை பொய்யாக்கி மாபெரும் பெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.