

திருச்சி பாலக்கரை மாநகராட்சி 2-வது மண்டல குழு அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய். படம்: ர.செல்வமுத்துகுமார்
ஜனநாயகன் திரைப்படம் இந்தத் தேர்தலில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என்பதால் படம் வெளியாவதை தடுக்க ஒரு கூட்டு சூழ்ச்சி நடக்கிறது என்று திருச்சியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் குற்றம்சாட்டினார். முன்னதாக, திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏற்கெனவே பெரம்பூர் தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் நேற்று பகல் 12.20 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி உதவி ஆணையருமான முத்து முருகேசபாண்டியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் பேசியதாவது: தமிழகத்தில் காஸ் சிலிண்டர் பிரச்சினையால் ஏராளமான டீக்கடைகள், ஓட்டல்களை மூடிவிட்டனர். அவர்கள் (பாஜக) கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் காஸ் தட்டுப்பாட்டை தவிர்திருக்கலாம். இவர்களாவது(திமுக) முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் காஸ் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
இவர்கள் இருவரும்தான்(திமுக-பாஜக) இதற்கு காரணம். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டால், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பார். அவரது வீட்டில் ஒரு ரெய்டு, ஒரு பிரச்சினை என்றாால் டெல்லிக்கு பறந்து சென்று வருவார். அதேபோல, இதற்கும் டெல்லிக்கு சென்றிருந்தால் பிரயோஜனமாக இருந்திருக்கும். எதையெல்லாம் செய்ய முடியாதோ, அதையெல்லாம் பொய் வாக்குறுதிகளாக கொடுத்து ஏமாற்றுவது தான் முதல்வரின் வேலை. தற்போது அடுத்த பொய் வாக்குறுதிகளை தயார் செய்துவிட்டார். ஆனால், நாங்கள் மக்களுக்கு என்ன தேவையோ, அதைத் தான் சொல்லுவோம்.
திருச்சியை சேர்ந்த ஒரு அமைச்சர், நகராட்சி துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக வாங்கிவிட்டு, தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்திருக்கிறார். இந்த ஒரு துறையில் மட்டும் ரூ.1,000 கோடி ஊழல் என்றால் மற்ற துறைகளை எடுத்து பார்த்தால் தலைசுற்றும். லட்சக்கணக்கான பேருக்கு வேலை கொடுப்பேன் என்றார்கள். அது என்னவானது என்று தெரியவில்லை. திமுகவில் வெறும் அறிவிப்புகள் மட்டுமே வெளியிடுகின்றனர். இதனால் எவ்வித பயனும் இல்லை. மொத்தத்தில் யூஸ்லெஸ் கவர்மென்ட்டாக உள்ளது.
கரூர் நிகழ்ச்சி சூழ்ச்சி என்று பலர் சொல்வதை போல, ஜனநாயகன் படத்துக்கு எதிராகவும் சூழ்ச்சி நடக்கிறது. ஜனநாயகன் திரைப்படம் வெளிவந்தால், என் மனதுக்கு நெருக்கமான உங்கள் எல்லோருடனும் எனக்கு இருக்கும் பூர்வ ஜென்ம பந்தத்தை அது இன்னமும் இறுக்கமாக மாற்றிவிடுமோ என்று சூழ்ச்சி செய்கின்றனர். நாம் நெருக்கமாகி ஜனநாயகன் திரைப்படம் இந்தத் தேர்தலில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என்பதால் படம் வெளியாவதை தடுக்க ஒரு கூட்டு சூழ்ச்சி நடக்கிறது. எனவே, உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்து நீதி வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரை திமுக பணப்பையில் போட்டுகொண்டதுடன், சிறுபான்மை மக்களை ஏமாற்ற பாதி கதர் கூட்டணியும், ‘மற்றும் பலர் கூட்டணியின்’ டெல்லி ஓனரோடு கொல்லைப்புறமாக கள்ள கூட்டணியும், அதாவது பாதி காவி கூட்டணியையும் திமுக அமைத்துள்ளது. ஆனால் கொள்கை என்று நம்மை ஏமாற்றுகின்றனர். திமுகவையும், பாஜகவையும் நம்பாதீர்கள். இவர்கள் இருவரும் வேறு வேறு கூட்டணி இல்லை. இவர்கள் ஒரே கூட்டணிதான். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மரக்கடை எம்ஜிஆர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேச்சின் இறுதியில், ‘‘நான் தன்னந்தனி ஆளு... நீ ஏளனமா பாரு.. கொஞ்சம் நகர்ந்தேன்னா இங்கு எட்டு கோடி பேரு.. மிரளபோகுது ஸ்டேட்டு.. எங்க விசிலு சத்தம் கேட்டு’’ என்று உற்சாகமாக பாட்டு பாடி தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
கீழே விழுந்த தம்பதி: நலம் விசாரித்த விஜய்
விமான நிலையத்திலிருந்து பாலக்கரைக்கு பிரச்சார வேனில் விஜய் சென்று கொண்டிருந்தபோது மேலப்புதூர் சுரங்கப்பாதையில் பைக்கில் பின் தொடர்ந்து வந்த ஒரு தம்பதி தடுமாறி கீழே விழுந்தனர். இதை கவனித்த விஜய் வேனை நிறுத்தி கீழே இறங்கி, அவர்களிடம் விசாரித்து, பத்திரமாக செல்லும்படி அறிவுறுத்தினார்.