பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்

பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்
Updated on
1 min read

சென்னை: முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியையும் அமைத்துள்ளது. முதல்வர் விஜய் உள்ளிட்ட 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. நீண்ட காலத்துக்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் தவெக வாய்ப்பு தந்திருப்பது பரவலாக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இதற்கிடையே, முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களை விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் தொடர்ச்சியாக, டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில், கடந்த 15-ம் தேதி புறப்பட்டு 5 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளார். முதலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்திக்க உள்ள விஜய், தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி, வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க உள்ளார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளார். தமிழக அரசின் நிதியுதவியுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.

முதல்வரின் வருகையை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதல்வர் தங்கும் அறை, ஆலோசனை அரங்கம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை துரிதப்படுத்த தமிழகத்தில் இருந்து அரசு அதிகாரிகள் விரைவில் டெல்லி செல்கின்றனர். முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லிக்கு வரும் விஜய்க்கு அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்
‘அம்மா உணவக’ அரசியல்... முதல்வர் விஜய் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in