

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், சிறுபான்மையினர் வாக்கு வங்கி முழுமையாக தனக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது திமுக. அதேநேரத்தில் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை குறிவைத்து தவெகவும், நாதகவும் தீவிரமாக காய் நகர்த்த ஆரம்பித்துள்ளன.
தமிழகத்தில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகள் சுமார் 12 சதவீதம் உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பரவலாக சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளது. அதிலும் குறிப்பாக சுமார் 50 தொகுதிகளில் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் அடர்த்தியாக உள்ளது.
காலங்காலமாக சிறுபான்மையினரின் வாக்கு வங்கி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் இருந்தது. இதன் காரணமாகவே இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் அது தேர்தலில் வெற்றியாக மாறியது. ஆனாலும், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியவுடன் அவர் சிறுபான்மையின வாக்குகளை கணிசமாக தன் பக்கம் இழுத்தார். அதன் பின்னர் ஜெயலலிதாவும் சிறுபான்மையினருக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி அந்த வாக்கு வங்கியை தக்க வைத்தார்.
முக்கியமாக, பாஜகவோடு எப்போதும் கூட்டணி இல்லை, மோடியா இல்லை லேடியா என எனக் கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்தார் ஜெயலலிதா. இதனால் சிறுபான்மையினரின் ஆதரவுடன் 2011, 2026 சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியோ பாஜகவோடு கூட்டு சேர்ந்தார். மேலும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களையும் அக்கட்சி எதிர்க்கவில்லை. அதே நேரத்தில், சிஏஏ, முத்தலாக், வக்பு திருத்த சட்டம், எஸ்ஐஆர் என சிறுபான்மையினருக்கு எதிரானதாக சொல்லப்படும் சட்டங்களை திமுக கடுமையாக எதிர்த்தது. இதன் விளைவாக அதிமுக பக்கம் இருந்த சிறுபான்மையினர் வாக்கு வங்கி படிப்படியாக கரைந்தது. இந்தச் சூழலில்தான், சிறுபான்மையின வாக்குகளின் ஆதரவுடன் 2019 முதல் தொடந்து திமுக வென்று வருகிறது.
“சிறுபான்மை வாக்குகள் முழுமையாக எங்களுக்கே” என்ற திமுகவின் நம்பிக்கையை குலைக்கும் வகையில், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் சட்டப்பேரவை தேர்தலுக்க்காக வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளன.
விஜய் போடும் கணக்கு:
விஜய் கட்சி தொடங்கியது முதலே பாஜகவை கொள்கை எதிரி என சொல்லி கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும், மத்திய பாஜக அரசு கொண்டுவந்த சிஏஏ, வக்பு திருத்தம் போன்ற சட்டங்களையும் தீவிரமாக எதிர்த்தார். விஜய்யும் கிறிஸ்தவர் என்பதால் தவெக பக்கம் சிறுபான்மையினர் வாக்குகள் குவியும் என அக்கட்சி கணக்குப் போடுகிறது.
முக்கியமாக கிறிஸ்தவர்கள் அடர்த்தியாக உள்ள கன்னியாகுமரி, நாகர்கோயில் மாவட்டங்களில் தவெக கிறிஸ்துமஸ் விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ளது. அதேபோல முதன்முறையாக வாக்களிக்கும் சிறுபான்மையினர் மற்றும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என கருதும் சிறுபான்மை வாக்குகள் தனக்கே வரும் என உறுதியாக நம்புகிறார் விஜய்.
விஜய்க்கு சிறுபான்மை வாக்குகள் அதிகளவில் கிடைக்கும் என சொல்லப்பட்டாலும், அவர் மீது விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. பாஜகவை கொள்கை எதிரி எனச் சொல்லும் விஜய், அக்கட்சியை மேலோட்டமாக மிக குறைவாக விமர்சிக்கிறார் என ஒரு தரப்பு குற்றம் சாட்டுகிறது.
அதேபோல, திருப்பரங்குன்றம் போன்ற சென்சிட்டிவ் விஷயங்களில் கருத்து சொல்லாமல் விஜய் மவுனம் காக்கிறார் எனவும் சாடுகின்றனர். முக்கியமாக, தவெகவின் கொள்கை தலைவர்களின் ஒருவர் கூட சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் இல்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர் தரப்பு அடுக்குகிறது.
சீமானின் வியூகம் என்ன?
மேற்குறிப்பிட்ட கட்சிகளில் இருந்து நாம் தமிழரின் சிறுபான்மையினர் குறித்த பார்வை தனித்துவமானது. ஏனென்றால் அவர் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் சிறுபான்மையினர் இல்லை. அவர்கள் இனத்தால் ‘பெரும்பான்மை தமிழர்கள்’ என்கிறார். அதேபோல சிஏஏ, வக்பு போன்ற சட்டங்களை எதிர்த்து தீவிரமான போராட்டங்களையும் நாதக நடத்தியது. இதன் காரணமாக கடந்த தேர்தல்களில் கணிசமாக சிறுபான்மையினர் வாக்குகள் நாதகவுக்குச் சென்றது.
இதுமட்டுமின்றி இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அதிகளவில் வாய்ப்பும் வழங்குகிறார் சீமான். குறிப்பாக பல இஸ்லாமிய, கிறிஸ்தவ பெண்களை சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பாளராக்கியுள்ளார்.
அதேபோல இப்போது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக இஸ்லாமிய பெண்கள் உட்பட பலரையும், அதிகளவில் கிறிஸ்தவர்களையும் நியமித்துள்ளார். ஒரு பக்கம் முப்பாட்டன் முருகன் என்று சொல்லி விழா எடுக்கும் சீமான், மறுபக்கம் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ‘மொழியால் பெரும்பான்மையினர்’ எனச் சொல்லி தனி ரூட்டில் பயணிக்கிறார்.
சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக அள்ளலாம் என கணக்குப் போட்டிருந்த திமுகவுக்கு, இப்போது போட்டியாக விஜய் வந்து நிற்கிறார். போதாக்குறைக்கு சீமானும் அந்த வாக்குகளை கவர்ந்திழுக்கிறார்.
எனவே, இனிவரும் நாட்களில் சிறுபான்மையினரை கவர இன்னும் பல திட்டங்களை திமுக அறிவிக்கலாம். சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெறப்போவது யார் என பொறுத்திருந்து பார்ப்போம்!