

சட்டப்பேரவை தேர்தலில் தங்களது கூட்டணி திமுக-வுடனா அதிமுக-வுடனா என இறுதி செய்யும் முயற்சியில் தேமுதிக தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் வரும் 5-ம் தேதி மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேமுதிக எந்தப் பக்கம் சாயும் என்பதும் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை இறுதி செய்வதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது. இதையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜன.5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடலூரில் ஜனவரி 9-ம் தேதி நடைபெறும் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’-ல் தேமுதிக-வின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்த நிலையில், மாநாட்டுக்கு முன்பாக, கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும், தேர்தல் வியூகங்களை இறுதி செய்யவும் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், கூட்டணி குறித்து மாவட்ட ரீதியான கள நிலவரங்களும் கேட்டறியப்படும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இணைந்தால் 6 முதல் 7 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் அதேசமயம், அதிமுக - பாஜக கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெற தேமுதிக விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதிபடுத்தப்படாததால் கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு, தேர்தல் செலவுகள், வெற்றிக் கணக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.