“தமிழர் ஒருநாள் பிரதமராகும் வாய்ப்பு நிச்சயம்” - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

“தமிழர் ஒருநாள் பிரதமராகும் வாய்ப்பு நிச்சயம்” - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
Updated on: 
2 min read

மதுரை: “தமிழர் ஒருநாள் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு நிச்சயம் உள்ளது” என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய மாலை 5.30 மணிக்கு கோயிலுக்கு வருகை தந்தார். அவருடன் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் உடன் சென்றனர்.

அவரை கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் க.செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர்.

பின்பு கோயிலில் 45 நிமிடங்கள் தரிசனம் செய்துவிட்டு மாலை 6.15 மணிக்கு தரிசனம் முடித்து வெளியே வந்த குடியரசு துணைத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அடுத்தடுத்து இரண்டு முறை மின் தடை ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியது: “அன்னை மீனாட்சி அருளால் மதுரை மாநகர மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் பாரத தேசம் முழுமைக்கும் எல்லா வளங்களும் நலங்களும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என மனதார பிராத்திக்கிறேன்.

மதுரை நகர் என்றாலே மீனாட்சி அம்மன்தான். அத்தகைய மீனாட்சி அம்மனுக்கு மகத்தான கும்பாபிஷேகத்தை செய்துள்ளீர்கள். அவரது அருள் எல்லோருக்கும் கிடைக்கும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நானோ ஆளுநரோ பதிலளிப்பது சரியாக இருக்காது. நான் சென்ற பிறகு அமைச்சரை கேளுங்கள்.

ஜனநாயக நாட்டில் தமிழர் பிரதமர் ஆவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்தவர் பிரதமர் ஆகியிருக்கிறார். குஜராத்தைச் சேர்ந்தவர் பிரதமர் ஆகியிருக்கிறார். அதேபோல் தமிழகத்தை சேர்ந்தவர் ஒருநாள் பிரதமராவதற்கு நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது.

நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்தியா வல்லரசாவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது. நிச்சயமாக ஒரு மகத்தான நாடாக, எல்லோருக்கும் வழிகாட்டும் நாடாக, மனித இனத்தையே அரவணைத்துச் செல்லும் நாடாக, இந்தியா உருவாகும்.

15 ஆண்டுக்கு முன்பாக இந்தியா வல்லரசாகும் என்று சொன்னால் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் எனத் தெரியாது. ஆனால் இன்றைக்கு இந்தியா வல்லரசாகும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்திருக்கிறது. அந்த நம்பிக்கைதான் இந்தியாவை இன்று ஏதோ ஒரு இடத்திலிருந்த நான்காவது வல்லரசாக உருவாகியிருக்கிறது. இந்த நான்காவது இடத்திலிருந்து முதலாவது வல்லரசாக நாம் மாறுவோம்.

பிரதமர் மோடி ஆட்சியைப் பற்றி சொல்வதும் தமிழக முதல்வர் ஆட்சியைப் பற்றி சொல்வதும் அரசியல்தான்” என்று அவர் கூறினார்.

நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபோது கோயிலுக்குள் மின் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழர் ஒருநாள் பிரதமராகும் வாய்ப்பு நிச்சயம்” - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
சென்னையில் 12 வயது சிறுவன் மீட்பு: ஆட்டோ ஓட்டுநர், இன்ஸ்பெக்டருக்கு டிஜிபி பாராட்டு

X