

சென்னை: நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகளில் கட்சியினர், பொதுமக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. பின்னர், நிருபர்களிடம் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் கூறியதாவது: நடந்து முடிந்த தேர்தலில், தவாக சார்பில் நெய்வேலி தொகுதியில் திருமால்வளவன், குறிஞ்சிப்பாடி தொகுதியில் கண்ணன் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தேன்.
2 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள சூழ்நிலையில், திமுக தனது உளவுத்துறை மூலமாக தெரிந்துகொண்டு, இத்தொகுதிகளில் பல இடங்களில் வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் வேட்பாளர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு 8 மணிக்கு மேல் பூத்களை கைப்பற்றி, வாக்களித்துள்ளனர். ஆனால், இதுவரை ஓர் இடத்தில் கூட குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதற்கு நேர்மாறாக, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
எனவே, நீதி கிடைக்கவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும், அப்பாவிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும் வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம், தமிழக காவல் துறை டிஜிபி, உள்துறை செயலர், உளவுத் துறை டிஜிபி ஆகியோர் எனக்கு நீதி வழங்க வேண்டும். எங்கள் கட்சி தொண்டர்கள், ஆதரவளித்தவர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக நீதி கேட்கும் நடவடிக்கையில் விரைவில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.