

சென்னை: சென்னையில் ஆட்டோ எல்பிஜி எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டுநர்கள் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து, நிரப்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால், காஸ் சிலிண்டர், ஆட்டோ எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க மாற்று வழிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்கிடையில், வாகனங்ளுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயு கிடைக்காததால், ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
சென்னை நகரில் பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்கள், கால் டாக்சிகள் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயுவை பயன்படுத்துகின்றன. தற்போது எல்பிஜி எரிவாயு தட்டுப்பாட்டால், பல்வேறு தனியார் ஆட்டோ எரிவாயு நிலையங்களில் மூடப்பட்டுள்ளன.
சைதாப்பேட்டை, கிண்டி. சிஐடி நகர் உள்பட சில இடங்களில் திறக்கப்பட்டுள்ள எரிவாயு நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து நிரப்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, சிஐடி நகரில் 2 கி.மீ. தூரத்துக்கு 3 மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து, காஸை நிரப்பி செல்லும் பரிதாப நிலைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஆட்டோ, கார் ஆகியவற்றுக்கு நிரப்பப்படும் காஸ் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், “ஏற்கனவே ஆட்டோ எரிவாயு தட்டுப்பாட்டால், ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பெரும்பாலான நிலையங்களில் எல்பிஜி எரிவாயு கிடைக்காததால், ஓட்டுநர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு, உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்” என்றனர்.
இது குறித்து, இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்திய எண்ணெய் நிறுவனங்களில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் கீழ் செயல்படும் எரிவாயு நிரப்பும் மையங்களுக்கும் போதுமான அளவு காஸ் வழங்கப்படுகிறது.
வாகன ஓட்டிகள் தங்களுக்குரிய வாகனங்களில் போதுமான அளவு காஸ் நிரப்பி கொள்ளலாம். ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடப்பதற்கு காரணம் பல தனியார் காஸ் நிரப்பும் நிலையங்களில், எரிவாயு இல்லாமல் இருப்பதுதான்.
அத்துடன், காஸ் தட்டுப்பாடு காரணமாக, ஒருசில காஸ் நிரப்பும் மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்தமாக அனைவரும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடத்தும் மையங்களை தேடி ஒரே நேரத்தில் செல்வதால், நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.