Published : 17 Oct 2013 03:03 PM
Last Updated : 17 Oct 2013 03:03 PM

அத்தனைக்கும் ஆசைப்பட்டேன்.. அவ்வளவையும் அடைந்தேன்..!

சேட்டை சேது - பல்வேறு அமைப்புகளின் சார்பில் பெஸ்ட் என்டர்டெய்னர், தன்னம்பிக்கைச் சுடர் போன்ற விருதுகளை பெற்ற ரேடியோ ஜாக்கி! ஐ.ஆர்.எஸ். நிறுவனம் நடத்திய சர்வேயில் மதுரையின் நம்பர் ஒன் ரேடியோ ஜாக்கியாக இந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இவர், இப்போது இருப்பது சூரியன் எஃப்.எம்-மில்.

விரைவில் சினிமாவில் அரிதாரம் பூசவிருக்கும் சேது, மதுரை மாவட்டத்தின் கடைக்கோடியான அச்சம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். பிறக்கும்போதே போலியோ பாதிப்பால், தொடைவரை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். பள்ளிக்கூடத்துக்கு கையால் தவழ்ந்து செல்லும் நிலை. அப்படிப்பட்டவர் இன்றைய நிலையை எப்படி எட்டினார் என்பதில் ஒரு தன்னம்பிக்கை கதை அடங்கியிருக்கிறது.

“இருக்குறதுலயே கொடுமையான சித்ரவதை நம்மை மற்றவர்கள் பரிதாபமாகப் பார்ப்பதுதான். அதனால், எனக்கு என் மீது பரிதாபப்படுபவர்களைப் பார்க்கவே பிடிக்காது. 16 வயசு வரைக்கும் பள்ளிக்கு தவழ்ந்தேதான் போனேன். கொளுத்தும் வெய்யில்ல தார் ரோட்டைத் தாண்டிப் போகணும். அப்பவும் நான் யார்கிட்டையும் ஹெல்ப் கேட்டதே இல்லை. மத்தவங்க என்னைய தூக்கிச் சுமக்கணுமேனு, ஸ்கூல் டூர்க்கு கூப்பிட்டாக்கூட நான் போக மாட்டேன்.

எப்பப் பாத்தாலும் ஜோக் அடிச்சுக்கிட்டே இருப்பேன். நம்மளும் சிரிக்கணும் நம்மள சுத்தி இருக்கவங்களையும் சிரிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். என்னோட ஆசைகள் எல்லாமே ரொம்ப பெருசு. தவழ்ந்துபோகும் காலத்திலேயே பைக் ஓட்ட ஆசைப்பட்டேன். அதுக்கு முந்தியே கார் வாங்கணும்னு நினைச்சேன். சுயமா நடக்கணும்கிற ஆசை வெவரம் தெரியுறதுக்கு முந்தியே வந்திருச்சு. 17 வயசுல நானே தட்டுத் தடுமாறி கம்பை ஊன்றி நடக்கப் பழகிட்டேன். இப்ப என்னோட பைக், கார் ஆசையும் நிறைவேறிடுச்சி - என்னோட சுய சம்பாத்தியத்துல. நான் ஓட்டுற பைக், கார் எல்லாத்தையும் எனக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கிட்டேன். அதுதான் வாழ்க்கை. இருக்கிற இடத்திற்கும், சவாலுக்கும் தகுந்த மாதிரி நம்மை நாமே மாத்திக்கிடணும்" தனது அனுபவத்தைச் சொல்லிக் கொண்டே காரைவிட்டு இறங்கிய சேது, தொடர்ந்தும் பேசினார்.

"சென்னையில் கிடைச்ச சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை விட்டுட்டு திண்டுக்கல்லுக்கு ஓடியாந்துட்டேன். அங்க ஒரு லோக்கல் சேனல்ல வாய்கிழியப் பேசுற வேலை, தாவித்தாவி பல வேலைகள்ல இருந்தேன். எதுவுமே செட் ஆகலை. 2007 செப்டம்பரில் மதுரையில் முதன் முதலாக தனியார் எஃப்.எம். ஆர்.ஜே.வுக்காக நடத்திய இன்டர்வியூல செலக்ட் ஆன ஏழு பேருல நானும் ஒருத்தன்.

இப்பத்தான் உங்கக்கிட்டத்தான் முதன்முதலா நான் மாற்றுத் திறனாளிங்கிறதை ஒத்துக்கிட்டிருக்கேன். மற்றபடி அரசல் புரசலாக கேள்விப்பட்டு, போன் போட்டு துக்கம் விசாரிப்பாங்க. ஆர்வம் மிகுதியால என்னைய ஆபீஸுக்கு வந்து பார்க்கிறவங்க, கண்கலங்குவாங்க. அடுத்து ஷோ கேட்கும்போது, 'சேது நீங்க ஜோக் அடிச்சாக்கூட எனக்கு அழுகை அழுகையாக வருது'ன்னு அன்பே சிவம் மாதவன் மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நான் சொல்ல வர்றது ஒண்ணு தான். சாதாரணமானவங்களை விட நமக்கு ஏதோ ஒரு திறமை கொஞ்சம் கூடுதலா இருக்கும். அதைக் கண்டுபிடிங்க. யாரையும் பரிதாபமாகப் பார்க்கவிடாதீங்க. சாதிக்கலாம். நீங்க எதுவாக மாறணும்னு நினைக்கிறீங்களோ, அதுவாக மாறுவது நிச்சயம்” நெத்தியடியாய் சொன்னார் சேட்டை சேது.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x