

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், பட்டினப்பாக்கம் கையெழுத்து இயக்கத்தை முள்ளி மாநகர் பகுதியில் தொடங்கி வைத்தார். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
மீனவ மக்களின் வாழ்வியல் கோரிக்கை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கியது.
நவ. 1-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கையெழுத்து இயக்கத்தை பட்டினப்பாக்கம் முள்ளி மாநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் முதல் கையெழுத்திட்டு, தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது: பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் என்ற திட்டத்தை அரசு கைவிட வேண்டும், அதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
கடலும் கடல் சார்ந்த பகுதியும் அங்கு வாழ்கிற மீனவ மக்களுக்கு சொந்தமானது. அதேபோல, மலையும் மலைசார்ந்த பகுதிகளும் மலைவாழ் மக்களுக்கு சொந்தமானது. மலையில் இருந்து அப்பகுதி மக்களை வெளியேற்றி விட்டால், மலை, காடு பொருள் இழந்து விடும்.
கடல் சார்ந்த பகுதியில் இருந்து மீனவ மக்களை வெளியேற்றிவிட்டால், கடல் பொருள் இழந்துவிடும். எனவே, தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, மீனவ மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கடற்கரை காற்றை தடுப்பது இயற்கை மீது தொடுக்கும் தாக்குதல். கடல்வெளி அம்மக்களுக்கு சொந்தமானது. அங்கே எத்தகைய கட்டிடங்களும் எழக்கூடாது. இதுதான் சூழல் அரசியல்.
எனவே, சூழல் அரசியலை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, மீனவ மக்களின் வாழ்வியல் கோரிக்கை மீது தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, அதை நிறைவேற்ற வேண்டும்.