“தவெக அரசின் தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது ஆளுநர் உரை” - வைகோ பாராட்டு

 வைகோ, விஜய் |கோப்புப் படம் 

வைகோ, விஜய் |கோப்புப் படம் 

Updated on
2 min read

சென்னை: “முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது.” என ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிதாக அமைந்துள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல் திட்டங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே.

மதசார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மீனவர் நலன் ,பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப சமத்துவம், சம தர்மக் கோட்பாடுகளை நிலை நிறுத்த புதிய அரசு உறுதியாக இருப்பதை ஆளுநர் உரையில் பிரகடனம் செய்திருப்பது நம்பிக்கை தருகிறது.

மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார். 2031-ல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு “வெற்றி தமிழகம்” என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.

சமூக நீதியை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டு கூறியிருப்பதும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசு நிர்வாகத்தில் புறையோடிக் கிடக்கும் லஞ்ச ஊழல்களை அடியோடு ஒழிக்கவும், நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தி அனைவருக்குமான அரசாக தமிழ்நாடு அரசு திகழும்.

கனிம வளக் கொள்ளைகள் தடுக்கப்படும்; அரசின் வருவாய் அதிகரிப்பதற்கு மதுபான உற்பத்தியாளர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த வரித் தொகை சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் அரசின் கருவூலத்திற்கு கொண்டு வந்திருப்பது நிதி மேலாண்மையில் புதிய அரசின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.

ஒன்றிய அரசு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் நிலையில் நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு முனைப்பாக இருக்கிறது. தமிழக அரசு இயந்திரம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.

தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு எளிமையான வழிமுறைகள் உருவாக்கப்படும்.

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்; போதைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். போன்ற அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கதாகும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> வைகோ, விஜய் |கோப்புப் படம்&nbsp;</p></div>
தமிழக அரசு - மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல்: ஆளுநர் அர்லேகர் விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in