

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
கோவில்பட்டி: தமிழ்நாட்டில் நடந்த எஸ்ஐஆர் குளறுபடிகளுக்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 227-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையுடன் கூடிய ஸ்தூபிக்கும், பின்னர், மணிமண்டபத்தில் உள்ள வெண்கலச் சிலைக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு துறைகளில் முன்னர் இருந்த கமிஷன் மற்றும் ஊழல்களை, தமிழக முதல்வர் விஜய் அடியோடு அழித்து, ஒழித்துவிட்டார். முன்பிருந்த ஆட்சியில் திட்டமிடப்படாததால் வந்த விளைவே தற்போது ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறைக்கு காரணம். அதனால்தான் தற்காலிகமாக மின்சாரத்தை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தற்போதைய அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆட்சியை எப்படியாவது இருள் சூழ்ந்து விட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க நடத்தியது திமுக அரசு. எஸ்ஐஆர் நடத்தப்பட்டபோது, வாக்குச்சாவடிகளில் திமுகவினர்தான் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். எஸ்ஐஆர் சிறப்பாக இருந்தது என்று அப்போது சொன்னார்கள்.
இப்போது நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் மற்றும் கட்சியினர் பெரும் புரட்சிக் குரலை எழுப்பியதால், திமுகவினரும் எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கிறோம் என்கின்றனர். தமிழகத்தில், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு அன்றைக்கு ஆட்சியில் இருந்த திமுகதான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.
மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ஜி.ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.